சென்னை மாநகரில் அனைத்துவிதமான வாகனங்களுக்கும் புதிய வேகக்கட்டுப்பாட்டை சென்னை போக்குவரத்துக் காவல்துறை அறிவித்திருக்கிறது. இதற்கான ஆலோசனைக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக, காவல்துறை தெரிவித்திருக்கிறது.

புதிய விதிகளின்படி, சென்னை மாநகரில் இலகுரக வாகனங்கள் அதிகபட்சமாக 60 கி.மீ வேகத்தில் செல்லலாம். கனரக வாகனங்களும் இரு சக்கர வாகனங்களும் அதிகபட்சமாக 50 கி.மீ வேகத்தில் செல்லலாம். ஆட்டோ ரிக்ஷா அதிகபட்சமாக 40 கி.மீ வேகத்தில் செல்லலாம் என்று போக்குவரத்துக் காவல்துறை அறிவித்திருக்கிறது.
புதிய விதிகளின்படி, சென்னை நகரின் உள்பகுதிகளில் அனைத்து வகையான வாகனங்களும் அதிகபட்சமாக 30 கி.மீ வேகத்தில்தான் செல்ல முடியும். வரும் சனிக்கிழமை (நவ. 4-ம் தேதி) முதல் புதிய வேகக்கட்டுப்பாடு விதி அமலுக்கு வருகிறது.

சென்னை நகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாலும், புதிய வகையான வாகனங்கள் அதிக அளவில் வந்துகொண்டிருப்பதாலும் சாலை உள்கட்டமைப்பு போன்ற அம்சங்களை ஆய்வுசெய்து, அதனடிப்படையில் வாகனங்களின் வேகத்தை புதிதாக வரையறுக்க ஆறு பேர் கொண்ட ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது.
சென்னை மாநகரைப் பொறுத்தளவில், வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்பது குறித்த கட்டுப்பாட்டு விதிகள், 2003-ம் ஆண்டு வரையறுக்கப்பட்டன. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய விதி தற்போது அமலுக்கு வருகிறது. மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் பல்வேறு வகையான வாகனங்களின் வேகக்கட்டுப்பாடு குறித்து ஆய்வு செய்த குழுவினர், சென்னை மாநகருக்கான புதிய விதிகளை வரையறுத்தனர்.

சென்னை மாநகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், விபத்துகளைத் தவிர்க்கவும் புதிய வேகக்கட்டுப்பாடு விதி பயன்படும் என்று சமூகச் செயற்பாட்டாளர்கள் வரவேற்பு தெரிவிக்கிறார்கள். அதே நேரத்தில், இதைப் பயன்படுத்தி காவல்துறையினர் வசூல் வேட்டையில் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது என்ற அச்சத்தையும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
from Tamilnadu News https://ift.tt/jU27Cs4
