`DATA is wealth’ – இன்று, உலகின் விலை மதிப்பில்லாத விஷயங்களுள் ஒன்றாக மாறியிருக்கிறது டேட்டா. அப்படியான டேட்டாக்களை டார்க் வெப்பில் விற்று கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்த ஹேக்கர்கள், சமீபகாலத்தில் அதிகரித்திருக்கின்றனர். அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த 81 கோடி பேரின் டேட்டாக்கள் டார்க் வெப்பில் கசிந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி, ஒட்டுமொத்த தேசத்தையும் பதற்றத்திலும், அச்சத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. சுமார் 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் 57% மக்களின் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் கசிந்திருப்பது, இதுவரை வரலாற்றில் நடந்திராத ஓர் அசாதாரண விஷயம்!

டார்க் வெப்பில் டேட்டா!

ட்ராக் செய்ய முடியாத வகையில் இணையத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகப் பொருள்கள், ஆயுதங்கள் வாங்க, பண பரிமாற்றம் செய்ய உதவும் கள்ளச்சந்தைதான் `டார்க் வெப்.’ இந்த டார்க் வெப்பில்தான் இந்தியர்களின் மதிப்புமிக்க தகவல்கள் கசிந்திருப்பதாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி உளவு அமைப்பான `Resecurity.’

dark web

“அக்டோபர் 9-ம் தேதி, டார்க் வெப் பயனாளரான ‘pwn0001’, 81.5 கோடி இந்தியக் குடிமக்களின் ஆதார், பாஸ்போர்ட் தகவல்கள் அடங்கிய டேட்டா விற்பனைக்கு வந்திருப்பதாகப் பதிவிட்டிருக்கிறார். நான்கு டேட்டா செட் மாதிரிகளையும் அவர் அந்தப் பதிவில் கொடுத்திருக்கிறார். சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் மூலம் ஒரு லட்சம் பேரின் தகவல்கள்கொண்ட டேட்டா ஷீட்டை ஆராய்ந்து பார்த்தோம். அதில், பெயர், தொலைபேசி, வயது, முகவரி மட்டுமல்லாமல் ஆதார் எண், பாஸ்போர்ட் எண் ஆகிய மதிப்புமிக்க தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த டேட்டா ஷீட்டிலுள்ள தகவல்கள் உண்மையா எனத் தெரிந்துகொள்ள, இந்திய அரசு இணையத்தில் கொடுத்திருக்கும் `Verify Aadhaar’ என்ற அம்சத்தைப் பயன்படுத்திப் பரிசோதித்துப் பார்த்து, அந்தத் தகவல்கள் அனைத்தும் உண்மைதான் என நிபுணர்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். மேலும், அந்த டார்க் வெப் பயனரிடம் இதற்கான விலை குறித்துக் கேட்டபோது, ஒட்டுமொத்த தகவல்களையும் 80,000 அமெரிக்க டாலருக்கு (ரூ.66 லட்சம்) விற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்” எனக் குறிப்பிட்டிருக்கிறது ரீசெக்யூரிட்டி ரிப்போர்ட்.

எங்கிருந்து கசிந்தது?

கோவிட் பரிசோதனையின்போது இந்தியர்களிடமிருந்து பெறப்பட்ட டேட்டாக்கள்தான் இவை என்றும், `இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக’த்திடமிருந்து (ICMR) இந்தத் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. தேசிய தகவல் மையத்திடமும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடமும் கோவிட் பரிசோதனையின்போது பெறப்பட்ட தகவல்கள் இருக்கின்றன. அதனால், எங்கிருந்து கசிந்தது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருந்தும், இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அளித்த புகாரின்பேரில் சி.பி.ஐ தனது விசாரணையைத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து தற்போது வரை சுமார் 6,000 முறை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் சர்வரிலிருந்து டேட்டாக்களைத் திருட முயற்சிகள் நடந்திருப்பதாகத் தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்புதான், கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் தரவுகள் `கோவின்’ இணையதளத்திலிருந்து கசிந்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. `அந்தத் தரவுகள் போலியாக இருக்கலாம். அதுமட்டுமல்லாமல், இது கோவின் தளத்திலிருந்து திருடப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’ என மத்திய அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. கடந்த காலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் சர்வரிலிருந்து நோயாளிகளின் டேட்டாக்கள் திருடப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. அப்போதெல்லாம், ஏதோவொரு வகையில் நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, இந்த விவகாரத்தில் ஏன் மெளனம் காக்கிறது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

Hacking | டிஜிட்டல் தகவல்கள்

சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் சிலர், “ஒருவரின் தொலைபேசி எண் கசிந்திருந்தாலே, அதை வைத்து இங்கு ஏராளமான சட்டவிரோத நடவடிக்கைகள், பணத் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதில், பாஸ்போர்ட், ஆதார் எண்களும் கசிந்திருப்பது மிகப்பெரிய அச்சுறுத்தல்தான். 81 கோடி பேரின் டேட்டாக்கள் கசிந்திருப்பதற்கான போதிய ஆதாரங்கள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரின் டேட்டாக்கள் கசிந்திருப்பது உறுதியாகியிருக்கிறது. எனவே, இந்தத் தகவல் கசிவை முக்கியமான பிரச்னையாகக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்கப் பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்” என்கின்றனர்.

டிஜிட்டல் இந்தியாவின் மிகப்பெரிய க்ரைமாகப் பார்க்கப்படும் டேட்டா திருட்டுக்கு மத்திய அரசிடமிருக்கும் தீர்வு என்னவோ?!

from Tamilnadu News https://ift.tt/06JSNsY