அதிமுக, பாஜக கூட்டணி முறிவுக்குப் பின்னர், பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து வெளியேறி அதிமுக-வில் இணைவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொங்கு மண்டலத்தின் முக்கிய மாவட்டமான ஈரோட்டைச் சேர்ந்த பாஜக ஓபிசி அணியின் மாநிலத் துணைத் தலைவரும், மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதியின் மருமகனுமானன அசோக்குமார் அதிமுக-வில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வரும் தேர்தலில் பா.ஜ.க-வின் ஈரோடு மக்களவைத் தொகுதி எம்.பி.வேட்பாளர் அசோக்குமார்தான் என அக்கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென அசோக்குமார் அ.தி.மு.க-வில் இணைந்ததற்கு என்ன காரணம் என விசாரித்தோம். நம்மிடம் பேசிய சில பா.ஜ.க. நிர்வாகிகள், “திருச்செங்கோடு தொகுதி முன்னாள் அதிமுக எம்.பி.-யான செளந்திரத்தின் மகன்தான் அசோக்குமார். தற்போதைய மொடக்குறிச்சி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மகளை அசோக்குமார் திருமணம் செய்துள்ளார். ஆற்றல் என்ற பெயரில் அறக்கட்டளையும், பள்ளிகளையும் நடத்தி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பா.ஜ.க.-வில் இணைந்த அசோக்குமாருக்கு ஓபிசி பிரிவில் மாநிலத் துணைத் தலைவர் பொறுப்பும் வழங்கப்பட்டது. தனது அறக்கட்டளை மூலம் இலவச மருத்துவ முகாம்கள் நடத்துவது, கோயில்களை புனரமைத்து கொடுப்பது மற்றும் குறைந்த விலையில் உணவு, மருந்து வழங்குவது என கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஈரோடு மக்களவைத் தொகுதியைக் குறிவைத்து செயல்பட்டு வந்ததுடன், மாநிலத் தலைவர் அண்ணாமலையுடனும் நல்ல நெருக்கமாக அசோக்குமார் இருந்தார்.
ஆனால், எந்த நிகழ்ச்சிகளை அசோக்குமார் நடத்தினாலும், பிரதமர் நரேந்திர மோடி அல்லது மாநிலத் தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தையோ, பெயரையோ பிளக்ஸில் போடாமல் தனது புகைப்படத்தை மட்டும்தான் பிளக்ஸில் போடுவார். இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. கட்சிக்காரர்களே அசோக்குமாரிடம் எதுவும் பேச முடியாத நிலைதான் இருந்து வந்தது.
அண்ணாமலையுடனான தனது நெருக்கம், மாமியார் எல்எல்ஏவாக இருப்பது மற்றும் ஆற்றல் அறக்கட்டளை மூலம் ஒன்றரை ஆண்டுகளில் நடத்திய நலத்திட்ட நிகழ்ச்சிகளைக் காட்டி ஈரோடு மக்களவைத் தொகுதியை கண்டிப்பாக தனக்கு வாங்கிவிடலாம் என்று அசோக்குமார் நினைத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முறிவு ஏற்பட்டதால், அசோக்குமாரின் கனவும் தகர்ந்து போனது. அதிமுக கூட்டணியில் இருந்தால் பாஜக-வில் இருந்து வெற்றி பெறலாம் என நினைத்தார்.

இதனிடையே, ஈரோடு மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது பிளக்ஸ் வைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுக்கும் அசோக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அண்மையில், ஈரோடுக்கு வந்த மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பெரிதாக அசோக்குமாருடன் பேசவில்லை.
இந்த நிலையில் தான் அசோக்குமாரின் செயல்பாட்டால் அதிருப்திக்குள்ளான மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி, மருமகன் அசோக்குமாருக்குப் பதில் தனது மகனின் மனைவிக்கு எம்.பி. சீட்டு கேட்கும் திட்டத்தில் இருக்கிறார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில்லாமல் தனித்து நின்றால் தோல்வி அடைவது உறுதி என்பதால், எம்.பி.சீட்டை மனதில் வைத்து அ.தி.மு.க.-வுக்கு அசோக்குமார் தாவிட்டார்” என்கின்றனர் விவரம் அறிந்த ஈரோடு மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள்.

இதுதொடர்பாக அசோக்குமார் நம்மிடம் பேசுகையில், “தொடக்கத்தில் இருந்தே ஆற்றல் அறக்கட்டளை மூலம் மக்களுக்கான சேவையை செய்து வருகிறேன். எனது பயணத்தில் அ.தி.மு.க-வில் இணைந்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் எனத் தோன்றியது. மற்றபடி எம்.பி. சீட்டை குறிவைத்து அ.தி.மு.க.-வில் இணையவில்லை. பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் எனக்கு எந்த மனத்தாங்கலும் இல்லை.
கட்சியில் பதவி வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க.வில் இணையவில்லை. எனக்கு பிளக்ஸ் அரசியல் செய்யத் தெரியாது. அ.தி.மு.க.-வுடன் கூட்டணியில் இருந்த வரை நலத்திட்ட நிகழ்ச்சிகள் எந்த பிரச்னையும் இன்றி நடைபெற்றது. கூட்டணி முறிவுக்குப் பின், பாஜக நிர்வாகி என்ற ரீதியில்தான் என்னை அணுகுகின்றனர். இதனால், பல இடங்களில் பிரச்னை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே அ.தி.மு.க.-வில் இணைந்துள்ளேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/4t3pyDi
