“வங்கிக் கணக்கிலிருந்த கட்சி நிதியை எடுத்து செலவு செய்துவிட்டார், இஷ்டத்துக்கு நிர்வாகிகளை மாற்றுகிறார்” என்று மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர்மீது மற்றொரு நிர்வாகி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத மதுரை மாவட்ட பா.ஜ.க-வில், அந்தக் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், பிரசார அணி பொறுப்பாளருமான சரவணன் என்பவர், மாநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரனுக்கும், கட்சித் தலைமைக்கும் அனுப்பிய கடிதம் ஒன்று, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அதில், `நீங்கள் சமீபத்தில் 6 பேரை மையக்குழு ஒப்புதலுடன் பல்வேறு பொறுப்புகளுக்கு நியமித்திருக்கிறீர்கள். ஆனால், மையக்குழுவிலுள்ள கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்கப்பெருமாள், மாநகர் மாவட்டப் பார்வையாளர் கார்த்திக் பிரபு, மாவட்டப் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரை தொடர்புகொண்டு கேட்டதற்கு, நீங்கள் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றனர். நீங்கள் மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்ற ஒரு வருட காலத்தில் மூன்று, நான்கு முறை நிர்வாகிகளை மாற்றி அறிவித்திருக்கிறீர்கள். ஆனால், மொத்த நிர்வாகிகள் பட்டியலை நீங்கள் வெளியிடவில்லை.
நீங்கள் வெளியிடும் நிர்வாகிகள் பட்டியல், பொருளாதாரம் அல்லது சாதி அடிப்படையிலா என்பதை தெரியப்படுத்தவும். நீங்கள் கட்சி வங்கிக் கணக்கிலிருந்த 13 லட்சம் ரூபாயை தன்னிச்சையாக எடுத்து செலவு செய்ததாக, முன்பிருந்த பொருளாளரால் குற்றம்சாட்டப்பட்டதாக அறிந்தேன். அதற்கு உங்கள் பதில் என்ன?” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இது குறித்து கடிதம் எழுதிய பிரசார அணிப் பொறுப்பாளர் சரவணனிடம் கேட்டேன். “கடிதம் எழுதியது நான்தான். ஆனால், கட்சிக்குள் அனுப்பிய கடிதம் எப்படி வெளியே வந்தது என்று தெரியவில்லை. ஏனென்றால் இதை நான் பப்ளிசிட்டிக்காக அனுப்பவில்லை. நான் 18 வருடங்களாகக் கட்சியில் இருக்கிறேன். கட்சிக்கு எந்தக் கெட்ட பெயரும் வரக் கூடாது என விரும்புகிறேன். ஏற்கெனவே நிர்வாகிகள் இருக்கும்போது அதே பொறுப்புக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பது, சீனியர்களை ஓரம்கட்டி கட்சிக்குச் சம்பந்தமில்லாத நபர்களை நியமிப்பது என கட்சியில் விதிகளை மீறி சம்பவங்கள் நடக்கின்றன. அவை கட்சியின் கட்டமைப்பைப் பாதிக்கும் என்பதால், கட்சி நிதியை எடுத்து செலவு செய்ததாகச் சொல்லப்படும் குற்றம்சாட்டுக்கு விளக்கம் கேட்டு, மாவட்டத் தலைவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் அனுப்பியிருக்கிறேன்” என்றார்.

இதைக் குற்றச்சாட்டு குறித்து மாநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரனிடம் கேட்டேன். “மதுரையில் அரசுக்கு எதிராக மாநகராட்சிக்கு எதிராக குரல் கொடுக்க எந்தக் கட்சியும் இல்லை. கூட்டணியில் இருப்பதால் கம்யூனிஸ்ட்டுகள் அமைதியாகிவிட்டார்கள். மாநகர் மாவட்ட பா.ஜ.க-தான் அனைத்துக்கும் எதிராக குரல் எழுப்பி வருகிறது. இது பிடிக்காத ஆளுங்கட்சியினர், எனக்கு எதிராக சிலரைத் தூண்டி விடுகின்றனர். அந்த வகையில்தான், இவர் என்மீது அவதூறு பரப்புகிறார்.
புகார் இருந்தால் அதை என்னிடம் நேராகவோ அல்லது மாவட்ட நிர்வாகிகளிடமோ வந்து பேசியிருக்கலாம். அதை சமூக ஊடகத்தில் வெளியிடுவதன் மூலம், அவர்களின் நோக்கம் புரிகிறது. நிர்வாகிகள் பட்டியல் எல்லோரிடமும் கலந்து ஆலோசித்துதான் வெளியிடுகிறோம். அதில் எந்த பாரபட்சமும் இல்லை. அதுபோல் கட்சி வங்கிக் கணக்கிலிருந்து நினைத்தவுடன் யாரும் பணம் எடுக்க முடியாது. அதற்கு மூன்று பேர் ஒப்புதல் கையெழுத்திட வேண்டும். இந்த வழிமுறை தெரியாமல் பேசுகிறார். அதற்கான தேவையும் எனக்கு இல்லை. அவதூறு செய்வதற்காக இந்தக் கடித்ததை எழுதியிருக்கிறார். இதற்குப் பின்னால் யாரோ இருக்கிறார்கள். இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகக் கட்சியில் எந்த வேலையையும் செய்யவில்லை. இவர்மீது நடவடிக்கை எடுக்க, தலைமையிடம் கூறியிருக்கிறேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மதுரை பா.ஜ.க-வுக்குள் எப்போதுமே சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது, தலைமை உடனே தலையிட வேண்டும், என்று பா.ஜ.க தொண்டர்கள் கேட்கிறார்கள்.
from Tamilnadu News https://ift.tt/PaZzbAG
