விருதுநகரில் சமூகநலத்துறையின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், முதிர்வுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், `பயனாளி, படிப்பைத் தொடராமல் முதிர்வுத்தொகைக்கான காசோலையைப் பெற முடியாது’ என மாவட்ட ஆட்சியர் கூறியது, கல்வி ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இது குறித்து ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் பேசினோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “1992-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கும், கல்வி இடைநிற்றலைத் தடுக்கவும் பெரிதும் உதவியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் அரசு, நிலையான வைப்புத்தொகையான ரூ.50 ஆயிரத்தை, தமிழ்நாடு மின்விசை நிதி, அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்து, சேமிப்பில் வைக்கிறது.

இந்த வைப்புத்தொகையின் ரசீது நகல், சம்பந்தப்பட்ட பெண் குழந்தைகளின் குடும்பத்துக்கு வழங்கப்படுகிறது. வைப்புத்தொகையானது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களாக உள்ள பெண் பிள்ளைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்தவுடன், முதலீடு தொகையை வட்டியுடன் சேர்த்து முதிர்வுத்தொகையாக பயனாளர்களுக்கு அரசு வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பலன் பெறுவதற்கு பெண் பிள்ளைகள் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதியிருக்க வேண்டும். இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த பயனாளிகளுக்கு, முதிர்வுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், பயனாளிகளுக்கு முதிர்வுத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்‌.

அந்த சமயத்தில் பயனாளிகள் ஒவ்வொருவரிடமும், தற்போது அவர்கள் என்ன செய்கிறார்கள்… என்ன படிக்கிறார்கள்… எங்கு படிக்கிறார்கள் போன்ற விஷயங்களைக் கேட்டறிந்தவாறே, காசோலைகளை வழங்கினார். அப்போது, வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த பயனாளி ஒருவரிடம், `தற்போது என்ன படிக்கிறீர்கள்’ என ஆட்சியர் கேட்டதற்கு, ‘வீட்டில் வசதியில்லை. ஆதலால் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. தற்போது வீட்டில்தான் இருக்கிறேன்’ என அந்தப் பெண் பதில் சொன்னார். இதைக்கேட்டு ஒருகணம் யோசித்த மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட பெண் பிள்ளையின் தந்தையை அழைத்து, `மகளை ஏன் படிக்கவைக்கவில்லை?’ என வினவினார்‌.

தொடர்ந்து, `மகளைப் படிக்கவைப்பதற்கு குடும்ப பொருளாதார பின்னணிதான் காரணமென்றால், பெண் பிள்ளையைப் படிக்கவைப்பதற்கான ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகமே செய்துகொடுக்கும். ஆகவே, மகளைக் கட்டாயம் படிக்கவையுங்கள். பள்ளிக்கல்வியில் விருப்பம் இல்லாவிட்டாலும், தொழிற்கல்வி பயில வையுங்கள். ஒருவேளை பெண்களுக்கு திருமணமாகியிருந்தால், குறைந்தபட்சம் தொலைத்தூர கல்வியாவது பயில வையுங்கள். தற்போதைய காலக்கட்டத்தில் பெண் பிள்ளைகளுக்குக் கல்வி மிகவும் அவசியமானது’ என்றவர், அந்தப் பெண்ணிடம், `நீங்கள், பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறைவு செய்தது போதாது. நிச்சயம் மேற்படிப்பு படிக்கவேண்டும். அவ்வாறு கல்லூரியில் சேர்ந்த பின்பு, உங்களுக்கான முதிர்வுத்தொகை காசோலைகளை வாங்கிக்கொள்ளுங்கள். அதுவரை, உங்களுக்கு இந்த முதிர்வுத்தொகைக்கான காசோலையைத் தர இயலாது‘ என்றார்.

ஆட்சியர் ஜெயசீலன்

பள்ளிக்கல்வியை மட்டும் முடித்திருந்த இரண்டு பேரைத் தவிர்த்து, 40 பேருக்குக் காசோலைகள் வழங்கப்பட்டன. காசோலை நிறுத்திவைக்கப்பட்ட இரண்டு பெண் பிள்ளைகளின் விருப்பத்தை அறிந்து, அவர்களைப் படிக்கவைப்பதற்கு தாசில்தார் தலைமையிலான குழு அமைத்து நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்” என்றனர்.

பயனாளர் தரப்பில், காசோலை நிறுத்திவைக்கப்பட்ட பெண் பிள்ளையின் தந்தை நம்மிடம் பேசுகையில், “கலெக்டர் சார் நல்லதுக்குத்தான் சொல்றாரு. நிச்சயம் அதைக் கேட்டுப்பேன். வீட்டுக்குப் போனதும் என் மகள்கிட்ட கலந்து பேசிட்டு, மேற்கொண்டு என்ன படிக்க வைக்கலாம் என்று முடிவுசெய்வேன். பத்தாம் வகுப்பு படிச்சு முடிக்கும்போதே, படிப்புமேல விருப்பம் இல்லைன்னு சொல்லித்தான் பள்ளிக்கூடம் பக்கம் போகல. நான் கூலித்தொழிலாளியா வேலை பாக்குறமாதிரி, என் மகளும் பிற்காலத்துல வேலை பார்க்கக் கூடாதுன்னு நினைக்கிறேன். அதுக்காகவாது, மகளோட மனசுல படிப்பு எவ்வளவு முக்கியங்கிறதை புரியவைப்பேன்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/PiuHNgc