நடிகர் மன்சூர் அலிகான், தான் நடித்து வெளியாகத் தயார் நிலையில் இருக்கும் `சரக்கு’ திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில், `லியோ’ படத்தில் நடித்தது குறித்துப் பேசினார். அப்போது த்ரிஷாவுடன் நடிக்க விரும்பியதாக மிகவும் சர்ச்சையான முறையில் பேசியிருந்தார். இதையடுத்து நடிகை த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்ட பலரும் அவரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கக் தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவாலுக்கு, தேசிய மகளிர் ஆணையம் கோரிக்கை விடுத்தது.

இதற்கிடையில், மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கும் மகளிர் காவல்நிலையம் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில், ‘மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும்போதெல்லாம் இந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு எங்கே சென்றிருந்தார்?’ என சமூக வலைதளங்களில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு, “தங்களைப்போல், சேரி மொழியில் என்னால் பேசமுடியாது. மணிப்பூர் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைக் கண்திறந்து பாருங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதில் “சேரி மொழி” என்ற குஷ்புவின் வார்த்தைக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

நடிகையும், முன்னாள் பா.ஜ.க உறுப்பினருமான காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் பக்கத்தில், “இதைச் சொல்வதற்கு எனக்கு எந்த உரிமையும் இல்லை, ஆனால் என் தவற்றை உணர்ந்துவிட்டதால் மீண்டும் அதை செய்ய மாட்டேன். சேரி என்ற வார்த்தையின் வலியை அறியாமல் பயன்படுத்தியதற்காக இப்போதும் வருந்துகிறேன். அந்த தவறை செய்யாக்கூடாது என்பதில் நானே பெரிய பாடமாக இருந்தேன்.
இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு அக்கா தவற்றை உணர்ந்து ட்வீட்டை நீக்கிவிடுவார் என நம்புகிறேன். மேலும், அவரது பதிவுக்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்புவுக்கு கண்டனங்கள் வலுத்தது. இந்த நிலையில்தான், “சேரி மொழி” என்பதற்கு குஷ்பு புதிய விளக்கத்தை அறிவித்திருக்கிறார்.

அதில், “எனது ட்வீட்டில் நான் பயன்படுத்திய வார்த்தைக்குக் கொந்தளிப்பவர்களைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. பெண்களின் மீது அநாகரீகங்கள் நடந்தபோது இதே வாய்கள் தான் மௌனித்திருந்தது. எனவே, எனது வார்த்தை பிரயோகம் குறித்துப் படித்தும் படிப்பறிவில்லாதவர்களுக்குச் சொல்லித்தர விரும்புகிறேன். எனது பதிவில் கேலிக்காக ‘சேரி’ என்ற பிரஞ்சு மொழி வார்த்தையைப் பயன்படுத்தினேன். சேரி என்றால் அன்பானவர் அல்லது நேசிப்பவர் என்று பொருள்படும் ஒரு வார்த்தை. என் அம்மா எனக்கு மரியாதை குறித்துக் கற்றுத்தந்திருக்கிறார். அதை நினைத்து பெருமைப்படுகிறேன். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் இருப்பவள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/wd0rhjO
