“விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் வகையிலான நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபடுகிறதா?”
“அப்படிச் சொல்லிவிட முடியாது. திமுக அரசை விவசாயிகள் நலனில் அக்கறையே இல்லாத ஜனநாயக விரோத அரசு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பிடவில்லை. நீதிமன்ற நெருக்கடிகள் போன்ற சில பிரச்னைகள் இருக்கின்றன. இருந்தாலும், அரசின் கவனத்துக்குச் செல்லும்போது மாற்றிக்கொள்ளும் போக்கும் இருக்கிறது.”

“சரி, மக்கள் பிரச்னைகளில்கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் களத்துக்குச் செல்லாமல் ஒதுங்கிவிடுகின்றன என்ற விமர்சனமும் பாஜக, அதிமுக-வால் முன்வைக்கப்படுகிறதே?”
“இந்தக் கேள்வியை என்னிடம் மட்டுமல்ல… கே.பாலகிருஷ்ணன், வைகோ, திருமாவிடம் பலமுறை கேட்டுவிட்டனர். `தி.மு.க ஒழிக’ என்று நாங்கள் கோஷம் போட வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா… அதற்கு வாய்ப்பே இல்லை. அதை நாங்கள் செய்தால், என்ன அரசியல் விளைவு ஏற்படும் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். தி.மு.க வேண்டாமென்றால், வேறு யார்… அந்த இடத்தில் அண்ணாமலையையா உட்காரவைக்க முடியும்… கம்யூனிஸ்ட் கட்சிகள் களத்துக்கு வருவதில்லை என்பது சுத்தப் பொய். விவசாயம், தொழில்துறை என எந்தத் துறை சார்ந்த பிரச்னை என்றாலும், எப்போதும்போல கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் போராடிக்கொண்டுதான் இருக்கின்றன.”
“தமிழக ஆளுநரும், தி.மு.க அரசும் பேசித் தீர்த்துக்கொள்ளலாமே! எதற்கு வழக்கு என தமிழிசை கேட்கிறாரே?”
“தமிழிசை தெலங்கானாவின் ஆளுநர்… புதுச்சேரிக்குப் பொறுப்பு ஆளுநர்தான். ஆனால் புதுச்சேரியிலேயே இருக்கிறார், தெலங்கானாவுக்குச் செல்வதே இல்லை, ஏன்… இங்கு ஆர்.என்.ரவி செய்ததை அங்கு தமிழிசை செய்தார். அதனால் தெலங்கானா அரசு நீதிமன்றத்துக்குச் சென்றது. உடனே கையெழுத்து போட்டுவிட்டார். இவர் நமக்கு அறிவுரை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.”
“தமிழ்நாட்டில் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி முறிவால் மோடி எதிர்ப்பு வாக்குகள் சிதறும். அது பா.ஜ.க-வுக்கு லாபம் என்கிறார்களே அரசியல் வல்லுநர்கள்?”
“அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி முடியவில்லை என்பதை அவர்களே சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்து நிரூபித்துவிட்டார்கள். கூட்டணியில் இணைந்தாலோ, விலகினாலோ அதற்கு ஒரு கொள்கைக் காரணம் இருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க விலகியது அண்ணாமலையுடனான முரண்பாட்டால் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அ.தி.மு.க – பா.ஜ.க ஒன்றாக இருந்தாலும் சரி, தனியாக நின்றாலும் சரி… தி.மு.க கூட்டணி கடந்தமுறைபோலவே அமோக வெற்றிபெறும்.”
“ஆனாலும் பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியதால் உங்கள் அணிக்குச் சிறு அச்சம்கூட இல்லை என்று சொல்வது நம்பும்படியாக இல்லையே?”
“(சிரிக்கிறார்.) அச்சப்படும் அளவுக்கு எடப்பாடி என்ன செய்துவிட்டார்… எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ மறையும்வரை மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கவில்லை. `மோடியா, லேடியா?’ என்று 2014-ல் கேட்டவர் ஜெயலலிதா. அந்தத் துணிச்சல் எடப்பாடிக்கு என்றைக்காவது வந்திருக்கிறதா, வருமா… கொள்கைரீதியாக மோடியை விமர்சிக்கத் துணிச்சல் இல்லாதவரைப் பார்த்து நாங்கள் ஏன் அச்சப்பட வேண்டும்?”

“தி.மு.க ஆட்சியில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றன என்ற விமர்சனங்கள் வருகின்றனவே?”
“தி.மு.க ஆட்சியில்தான் சாதிய வன்கொடுமைகள் நடக்கின்றன என்று மடைமாற்ற வேண்டாம். காலங் காலமாக இருக்கிற பிரச்னைகள் இவை. நாங்குநேரியில் நடந்தது சகித்துக்கொள்ளவே முடியாதது. தூத்துக்குடியில் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்துத் திருமணம் செய்தார்கள் என்பதற்காகக் கொன்றிருக்கிறார்கள். தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால்தான் தவறு. ஆனால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறார்கள். இவை தமிழ்நாட்டில் மட்டுமில்லை, நாடு முழுக்க நடக்கிறது. நிலவுக்குச் சந்திரயானை அனுப்பி பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிற காலத்தில் இதெல்லாம் நடக்கிறது என்பது அவமானம். மக்களிடையே இன்னும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதற்கு ஆயிரம் பெரியார், ஆயிரம் சிங்காரவேலர், ஆயிரம் ஜீவா, ஆயிரம் சங்கரய்யா, ஆயிரம் நல்லக்கண்ணு வர வேண்டும்.”
from Tamilnadu News https://ift.tt/Y0e1v4o
