நடிகர் மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு, நடிகை த்ரிஷா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அதையடுத்து, மன்சூர் அலிகானுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக டி.ஜி.பி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து பெண்களை இழிவுபடுத்திப் பேசுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின்கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
அது தொடர்பான விசாரணைக்காக அவர் காவல் நிலையத்தில் நேரிலும் ஆஜரானார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் இன்று காலை மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்ஜாமீன் மனுவைத் திரும்பப் பெறுவதாக வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, “எதற்காக மனுவைத் தாக்கல் செய்தீர்கள்… எதற்காக தற்போது திரும்பப் பெறுகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினார். அப்போது, “எதிர் மனுதாரராக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ப்பதற்கு பதிலாக, தவறுதலாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்த்துவிட்டோம். அதன் காரணமாக, இந்த மனுவைத் திரும்பப் பெறுகிறோம்” என மன்சூர் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி அல்லி, “நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம், நீதிமன்றம் ஒன்றும் விளையாட்டு மைதானம் இல்லை” எனத் தெரிவித்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய திருத்தப்பட்ட மனு, நாளை விசாரணைக்கு வருகிறது.
from Tamilnadu News https://ift.tt/rDFsnGM
