2020-ம் ஆண்டு அமெரிக்காவும், தாலிபன் அமைப்பும் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறியவுடன், தாலிபன்கள் ஆப்கன் அரசுடன் போரிட்டு, ஆகஸ்ட் 15, 2021-ம் ஆண்டு ஆப்கன் தலைநகர் காபூலைக் கைப்பற்றி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர்.

அதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசு பல்வேறு சலசலப்புகளையும், சர்ச்சைகளையும் சந்தித்து வந்தது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு இந்தியாவிலிருந்து தங்களின் தூதரகத்தை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் தூதரகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `கடந்த இரண்டு வருடங்களில் இந்தியாவிலுள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள், மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதால், அங்கு ஆப்கனிய சமூகம் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டிருக்கிறது.
அதனால், மிகவும் குறைந்த அளவிலான புதிய விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்திய அரசிடமிருந்து எதிர்கொண்டு வரும் சவால்களைக் குறைக்கும் விதமாக, கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி டெல்லியிலுள்ள தூதரகத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. இதன் விளைவாக எங்களுக்குச் சாதகமான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், டெல்லியிலுள்ள எங்களது தூதரகத்தை 23-11-2023 முதல் நிரந்தரமாக மூடும் முடிவை எடுத்திருக்கிறோம்.

இந்த முடிவு, கொள்கை மற்றும் நலன்கள் சார்ந்த பரந்த மாற்றங்களின் விளைவாகும். இந்தியாவிலுள்ள ஆப்கானிஸ்தான் குடிமக்கள், எங்களது பணிக்காலத்தின்போது வழங்கிய புரிதல் மற்றும் ஆதரவுக்காக தூதரகம் தனது உண்மையான நன்றியைத் தெரிவிக்கிறது. ஆப்கானிஸ்தான் குடியரசைச் சேர்ந்த தூதர்கள் யாரும் தற்போது இந்தியாவில் இல்லை. தேசிய தலைநகர் டெல்லியில் பணியாற்றியவர்கள் பாதுகாப்பாக வேறு நாடுகளுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.
ஆப்கன் குடியரசின் தூதரக அதிகாரிகள், பணியை இந்திய அரசிடம் மட்டுமே ஒப்படைத்திருக்கின்றனர். தூதரகத்தின் பணியைத் தொடர வேண்டுமா, முடித்துக்கொள்ள வேண்டுமா அல்லது மாற்று வழிகளைக் கருத்தில் கொள்வதா என்ற அனைத்து சாத்தியங்களும், தற்போது இந்திய அரசின் முடிவில்தான் இருக்கிறது. இந்த முடிவை எடுப்பதற்கு வரலாற்று நிகழ்வுகள் மற்றும் தற்போதைய சூழ்நிலைகளை கவனமாகப் பரிசீலித்தோம். கடந்த 22 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானுக்கு அளித்த ஆதரவுக்கும் உதவிக்கும், இந்திய மக்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி’ எனக் குறிப்பிட்டிருக்கிறது.
from Tamilnadu News https://ift.tt/WDU1aXc
