குவாரிகளில் ரெய்டு:
கடந்த அதிமுக ஆட்சியில் மூடப்பட்ட மணல் குவாரிகள் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது. மணல் குவாரிகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டது. ஆனால், மணல் குவாரிகள் செயல்பட தொடங்கிய தினம் முதலே தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துகொண்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், போலியான நடை சீட்டு பயன்படுத்தப்பட்டது, அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாக மணல் அள்ளியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது. மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பலரையும் தங்களின் விசாரணை வட்டத்தில் கொண்டுவந்தது அமலாக்கத்துறை. அதோடு, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும், சில முக்கிய பிரமுகர்களுக்கும் பங்கு இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆதாரம் திரட்டும் அமலாக்கத்துறை:
மணல் குவாரிகள் மட்டுமில்லாது, மணல் ஒப்பந்ததாரர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களிலும் அமலாக்கத்துறையின் சோதனை விரிவடைந்தது. இந்த மணல் குவாரிகளை கண்காணிக்கும் நீர்வளத்துறை அதிகாரிகள் சிலர் அமலாக்கத்துறை அதிகாரிகளின் பிடியில் உள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் நீர்வளத்துறை முக்கிய பிரமுகருக்கு நெருக்கமான ஒரு அரசு அதிகாரி நடந்த அனைத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கூறியதாக தகவல்கள் பரவியது.

இதனைத் தொடர்ந்து மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மணல் அள்ளப்பட்டதற்கான ஆதாரங்களைத் திரட்ட அமலாக்கத்துறை தரப்பு ஆயத்தமானது. அதற்காக மணல் குவாரிகளில் ஐ.ஐ.டி, இஸ்ரோவின் உதவியுடன் மணல் அள்ளப்பட்ட அளவு, முன்பு – பின்பு சாட்டிலைட் புகைப்படங்கள் என பல்வேறு ஆதாரங்களைத் தீவிரமாகத் திரட்டி வருகிறது. அதோடு, நீர்வளத்துறையின் கணக்கு வழக்குகளை நன்கு தெரிந்த சில மூத்த அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியிருக்கிறது அமலாக்கத்துறை.
விசாரணை வளையத்தில் அதிகாரிகள்:
இதனைத் தொடர்ந்துதான் நீர்வளத்துறையின் மூத்த பொறியாளர் முத்தையா நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை. முத்தையாவும் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார். அதிகாரிகள் அவரிடம் நீண்டநேரம் விசாரணையை நடத்தியிருக்கிறார்கள். அவரிடம் மணல் விற்பனை, பெர்மிட் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.
முத்தையாவைத் தொடர்ந்து இன்னும் பல நீர்வளத்துறை அதிகாரிகள், பொறியாளர்களிடமும் அமலாக்கத்துறையின் விசாரணை விரிவடைய இருக்கிறது என்கிறார்கள். அதோடு, இந்த விசாரணை தொடர்பாக, அமலாக்கத்துறை சோதனை நடத்திய மணல் குவாரிகள் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களுக்கும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கச் சம்மன் அனுப்பி இருக்கிறது அமலாக்கத்துறை. இன்னும் வரும் வாரங்களில் மணல் தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்படும் என்கிறது சாஸ்திரி பவன் வட்டாரம்.
இதனிடையே, சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த மனுவில், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு அதிகாரவரம்பு இல்லை என்றும், மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும், அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத்துறை செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், சுந்தர் மோகன் அமர்வில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் முறையிட்டார். முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக தெரிவித்தனர்.
என்ன நடக்கிறது என்பது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம், “கடந்த செப்டம்பர் மாதம் மணல் குவாரிகள், மணல் புள்ளிகள் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியது. பல இடங்களில் போலியான நடை சீட்டுகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்திருக்கிறது. நாங்கள் சோதனையிட்ட 30 மணல் குவாரிகளில் எந்த நடைமுறையும் சரிவரப் பின்பற்றப்படவில்லை. பல இடங்களில் இரவு நேரங்களிலும் மணல் எடுத்திருக்கிறார்கள். போலியான நடை சீட்டு பயன்படுத்தியதன் மூலம் அரசுக்குக் கோடிக் கணக்கான ரூபாய் வரி இழப்பும் ஏற்பட்டிருக்கிறது.
அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி மணல் அள்ளியதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்களையும் திரட்டிக்கொண்டிருக்கிறோம். ” என்கிறார்கள் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/xsAWc4o
