இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா (CAA) 2019 டிசம்பர் மாதம் 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி குடியரசுத் தலைவர் ஒப்புதலளித்த நிலையில் சட்டமானது. இந்த சட்டத்தின் அடிப்படையில், 2014 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர், ஜைனர்கள், பார்சி, கிறிஸ்தவ மக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும். இதில், இஸ்லாமியர்கள் குறித்த எந்த விவரமும் இல்லை. எனவே, இந்தச் சட்டம் இஸ்லாமியர்களைக் குறிவைத்து, தேர்தல் ஆதாயத்துக்காக வரையறுக்கப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பா.ஜ.க எம்.பி அஜய் மிஸ்ரா

பா.ஜ.க அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தால், இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கர்நாடகா, உத்தரப் பிரதேசம் உள்படப் பல மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் 80-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். ஆனாலும், மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து, இந்த சட்டத்துக்கான விதிகளை வகுப்பதில் சிக்கல் இருப்பதால், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு 8-வது முறை தொடர்ந்து கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட உத்தரப்பிரதேச எம்.பியும், மத்திய உள்துறை இணை அமைச்சருமான அஜய் மிஸ்ரா, “பங்களாதேஷில் மதத் துன்புறுத்தலிலிருந்து தப்பி ஓடிய மட்டுவாஸிடமிருந்து குடியுரிமை உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வேகமாகச் செய்யப்படுகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென்

அந்த சட்டத்தைச் செயல்படுத்துவதில் இருக்கும் சில சிக்கல்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. கிழக்கு பாகிஸ்தானிலிருந்து, வங்காளத்திலிருந்து வந்த பட்டியலின சமூகமான மாதுவாக்களிடமிருந்து குடியுரிமை உரிமைகளைப் பறிக்க முடியாது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சி.ஏ.ஏ-வின் இறுதி வரைவு நடைமுறைக்கு வருவதற்குத் தயாராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சில எதிர்க்கட்சிகள், இந்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 220 மனுக்கள் தாக்கல் செய்திருக்கின்றன”எனக் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென், “ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது மட்டுமே பா.ஜ.க மாதுவாஸ் சமூக மக்களை பற்றியும், சி.ஏ.ஏ-வை பற்றியும் பேசுகிறது. அப்போது மட்டும்தான் அவர்களுக்கு இது நினைவுக்கு வருகிறது. மேற்கு வங்கத்தில் காவி கட்சியால் ஒருபோதும் சி.ஏ.ஏ-வை செயல்படுத்த முடியாது. பா.ஜ.க-வின் இந்த பொய்யான வாக்கு அரசியலுக்கான நாடகம் மாதுவாக்களுக்கும், நாட்டு மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். அடுத்த ஆண்டு தேர்தலில் பா.ஜ.க அனைத்து தரப்பாலும் நிராகரிக்கப்படும். அதே நேரம் நாட்டின் குடிமக்களாக மாதுவாக்களின் உரிமைகளை திரிணாமுல் காங்கிரஸ் உறுதி செய்துவருகிறது” எனக் குறிப்பிட்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/njK0Ead