`வார்த்தைக்கு வார்த்தை `இது சமூக நீதி ஆட்சி’, `திராவிட மாடல் ஆட்சி’ என்று பெருமை பேசிக்கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடித்தளமான சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தாமல், மத்திய அரசுதான் நடத்த வேண்டும் எனக் கூறுவது எந்த வகையில் நியாயம்?’ என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கேள்வி எழுப்புகிறார்கள்.

“மத்திய அரசே சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்!” – ஸ்டாலின்
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்னை அல்ல. எல்லா மாநிலங்களின் பிரச்னை. சமூகநீதி தழைக்க வேண்டுமானால், மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் மத்திய அரசு நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியின மக்கள், சிறுபான்மையினர் என அனைவருக்கும் முறையாக இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதையெல்லாம் தேசிய அளவில் கண்காணித்து, உறுதிசெய்ய அனைத்து கட்சி எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்!” எனப் பேசினார்.
இதேபோல கடந்த அக்டோபர் மாதமும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்குக் கொண்டு செல்வதற்கும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும் ஏதுவாக, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், விரிவானதொரு சாதிவாரிக் கணக்கெடுப்பை இணைத்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு உடனடியாகத் தொடங்கிட வேண்டும்” என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆவேசப்படும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்:
“`மாநில உரிமைகளை காவு கொடுக்கலாமா?”
இந்த நிலையில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளால் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைக் கண்டறிந்து சமூக நீதியை வலுப்படுத்துவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம். அதை செயல்படுத்த அரசு மறுப்பது ஏன்? அதில் என்ன சிக்கல் உள்ளது? கொள்கை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை ஏற்றுக்கொள்வதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், அதை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும், அதில் தெரியவரும் தரவுகளின் அடிப்படையில் சமூக நீதி நடவடிக்கைளை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதாக பீகார் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் கூறி விட்ட நிலையில், மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறுவது மாநில உரிமைகளை தாரை வார்ப்பது இல்லையா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், “மாநில உரிமைப் போராளி என்று தம்மை அழைத்துக்கொள்ளும் முதல்வர், சமூக நீதி காக்கும் விஷயத்தில் மாநில உரிமைகளை காவு கொடுக்கலாமா? மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற குரல் இப்போது நாடு முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதன் நோக்கத்தையும், தேவையையும் புரிந்து கொண்டு தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசின் வாயிலாகவே நடத்துவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட வேண்டும்!” என வலியுறுத்தியிருக்கிறார்.
“ஸ்டாலின் தயங்குவது ஏன்? நடிக்கிறாரா?”
அதேபோல பா.ஜ.க மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறக்கப்படுவது வரவேற்கத்தக்கது. மண்டல் கமிஷன் அறிக்கை எவ்வாறு இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு (OBC) பயனுள்ளதாக இருந்ததோ, அதேபோல, இன்று பீகார் அரசு தானாக முன்வந்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியிருக்கிறது. அவர்கள் செய்யும்போது, அதை ஏன் தமிழ்நாடு அரசு செய்ய கூடாது. சமூக நீதி என்பதற்கு அர்த்தம் கண்டுபிடித்ததே தி.மு.கதான் என்பதுபோல வெற்று பேச்சுகளை பேசாமல், ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட வேண்டும். பீகார்போல, தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்!” என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதனடிப்படையில் இடஒதுக்கீட்டில் மாற்றங்களும் செய்யப்பட்ட நிலையில், சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த போவதாக பல மாநில அரசுகள் கூறி வருகின்றன. 5 மாநில தேர்தல் பிரசாரத்தில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல் காந்தி பேசி வருவது திராவிட மாடல் தலைவருக்கு தெரியாதா? அல்லது தெரியாதது மாதிரி நடிக்கிறாரா? மத்திய அரசுதான் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறி, இந்த கோரிக்கையை நீர்த்து போக செய்து விடலாம் என முதலமைச்சர் பகல் கனவு காண்கிறார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சர் தயங்குவது ஏன்? இந்த உரிமையை மத்திய அரசுக்கு விட்டுக் கொடுக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்!” எனவும் எல்.முருகன் சரமாரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“திசை திருப்பிட முயல்கிறாரா முதல்வர்?”
அதேபோல அ.ம.மு.க பொது செயலாளர் டி.டி.வி தினகரன், “சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக, தன்னை நோக்கி வரும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் மத்திய அரசின் பக்கம் முதல்வர் திருப்பி விட முயல்கிறாரோரா என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. மத்திய அரசின் உதவியின்றி மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்பதற்கு பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்கள் உதாரணமாக இருக்கும்போது, தி.மு.க அரசு சமூக நீதிக்கான அரசு என தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தவறாமல் பேசும் முதல்வர், தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குவது ஏன்?” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், “நாட்டிலேயே முதல் முறையாக சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் பீகார் மாநில அரசு, அம்மாநிலத்தில் ஏற்கெனவே அமலில் இருக்கும் 50% இட ஒதுக்கீட்டை 65% உயர்த்தி அதற்கான சட்டத்தையும் இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் பிகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு 30 சதவிகிதத்திலிருந்து 43 சதவிகிதமாகவும், பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீடு 13 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாகவும் உயர்ந்திருக்கிறது. பீகாரில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால் சட்ட ரீதியாக எவ்வித தடைகளும் இல்லை என்பதும் தெளிவாகிறது. எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்வது மட்டுமின்றி தமிழகத்தில் அமலில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காகவும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது கட்டாயமாகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியின மக்கள் வளர்ச்சிக்கும், அவர்களின் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஆணையை பிறப்பித்து, போதுமான நிதியை ஒதுக்கி, அதற்கான பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்க வேண்டும்!” என டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பீகாரை தொடர்ந்து ஆந்திர மாநில அரசும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவுசெய்து அதற்கான பணிகள் வரும் டிசம்பர் 9-ம் தேதி தொடங்கும் என அறிவித்திருக்கிறது. அதேபோல, கர்நாடகா, ஒடிசா மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியிருக்கின்றன. மேலும், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் தன்னிச்சையாகவே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறித்துக்கொள்கிறது என்று குற்றம் சாட்டும் முதல்வர் ஸ்டாலின், மற்ற மாநிலங்கள் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தும்போது சமூக நீதியின் தொட்டிலான தமிழ்நாட்டில் நடத்தாமல் இருப்பது சரியா? விடையை முதல்வர் தான் சொல்ல வேண்டும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/e2mYl3a
