கடந்த 2005 செப்டம்பர் 14-ம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கினார் விஜயகாந்த். ஊழல் ஒழிப்பு, திராவிடக் கட்சிகளுக்கு மாற்று, கடவுளோடும், மக்களோடும் மட்டும் கூட்டணி என்பதுதான் முக்கிய கொள்கைகளாக இருந்தன. 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8.45% வாக்குகளை பெற்று தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார், விஜயகாந்த். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தனித்தே களமாடிய தே.மு.தி.க.வுக்கு 10.45% வாக்குகள் கிடைத்தன.

அப்போது பலரும் முதல்வர் நாற்காலியில் விஜயகாந்த் அமர்வார் என பேச தொடங்கினர். ஆனால் 2011-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தார். 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களை மட்டுமே கைப்பற்றியது தே.மு.தி.க. வாக்கு சதவிகிதம் 7.9% ஆக குறைந்தது. தனியாக போட்டியிடுவதுதான் தனது பலம் என விஜயகாந்த் உணராததே இதற்கு காரணம். பின்னர் அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் ஏற்பட்ட மோதலில் எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த்.
பிறகு எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறியது, உடல்நலம் பாதிப்பு என தொடர்ச்சியாக அடி மேல், அடி விழுந்தது. 2014 மக்களவை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் 14 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி ஏற்பட்டதுடன் வாக்கு வங்கியும் 5.1% ஆக குறைந்தது. 2016 சட்டமன்ற தேர்தலில் வி.சி.க, ம.தி.மு.க, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து அமைத்த மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட 105 இடங்கள், 2021 தேர்தலில் 60 இடங்களில் தோல்வி ஏற்பட்டது. இதனிடையே விஜயகாந்தின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.

தீபாவளி பண்டிகையின் போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதற்கிடையில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த மாதம் 18-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார், விஜயகாந்த். அப்போது அவரது உடல்நலம் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் தீயாக பரவியது. மறுபுறம் பூரண குணமடைய வேண்டும் என தொண்டர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வந்தனர். ஒருவழியாக சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதனிடையே டிச.14-ம் தேதி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.
அதில் தமிழகம் முழுவதும் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ‘மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.15,000ம், இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமை தொகை வழங்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது காரில் அழைத்து வரப்பட்டார் விஜயகாந்த். அரங்கமே அதிரும் அளவுக்கு ‘கேப்டன்… கேப்டன்…’ என தொண்டர்கள் ஆரவாரமிட்டனர். சத்தம் அடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு மேல் ஆனது. விஜயகாந்தின் நிலையை பார்த்து பெண் தொண்டர்கள் பலர் கண் கலங்கினர்.

அதனைத்தொடர்ந்து விஜயகாந்த் முன்னிலையில் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டார், பிரேமலதா. பின்னர் விஜயகாந்தின் காலில் விழுந்து ஆசியும் பெற்றார். அப்போது பேசிய பிரேமலதா, “கேப்டன் கொடுத்த வேலையை சரியாக செய்வேன். எந்த நோக்கத்திற்காக கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அந்த லட்சியத்தை நிச்சயம் வெல்வோம். 2024-ல் தே.மு.தி.க எம்.பி.க்கள் டெல்லிக்கு செல்வது உறுதி. 2026-ல் தே.மு.தி.க ஆட்சி அமைப்பது உறுதி” என்றார். இதையடுத்து தே.மு.தி.க.வின் பொதுச் செயலாளராக பிரேமலதா அரியணை ஏறியிருக்கும் நிலையில், இனி அந்த கட்சியின் பயணம் எப்படி இருக்கும்? என மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் கேட்டோம்.
“கட்சி ஆரம்பித்த போது கடவுளுடனும், மக்களுடனும்தான் கூட்டணி என்றார், விஜயகாந்த். அந்த கொள்கையை பின்பற்றியவரை தே.மு.தி.க வேகமாக வளர்ந்து வந்தது. ஆனால் 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகுதான் விஜயகாந்துக்கான சரிவு ஆரம்பித்தது. தே.மு.தி.க எதற்காக தொடங்கப்பட்டதோ, அந்த தனி தன்மையை இழந்துவிட்டது. விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்திருந்தால் கட்சியை தூக்கி நிறுத்தி இருப்பார். விஜயகாந்துக்கு கொடுத்த ஆதரவை பிரேமலதாவுக்கு மக்கள் கொடுக்க மாட்டார்கள். இழந்த செல்வாக்கை மீட்க முடியாது என்பதால் பத்தோடு பதினொன்றாக கட்சியை நடத்தலாம்” என்றார்.
“கடந்த சில காலமாக கட்சி பணிகள் அனைத்தையும் பிரேமலதா தான் கவனித்து வருகிறார். அதனால் பிரேமலதாவுக்கு இந்த புதிய பதவி என்பது பெரிய மாற்றத்தை கொண்டு வராது. முன்னர் விஜயகாந்த் பெயரில் வெளியான அறிக்கைகளில் இனி பிரேமலதா பெயரும் இடம் பெறும். மற்றப்படி கூட்டணி விவகாரங்கள், கட்சி விவகாரங்களில் வழக்கம் போல் பிரேமலதா தான் செயல்படுவார்.” என்கிறார் அரசியல் நிபுணர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/gZr3bft
