அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நடத்திய முதல் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இதுதான் என்பதால், அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் அனைவருக்கும் இருந்தது. மேலும், பாஜக கூட்டணியை அதிமுக முறித்த பின்னர் நடந்த முதல் பொதுக்குழுக் கூட்டம் இது என்பதாலும் அரசியல் வட்டாரத்தில் ஓர் எதிர்பார்ப்பு நிலவியது. கூட்டத்தில் மத்திய அரசை விமர்சித்துப் பேசிய எடப்பாடி, மாநில திமுக அரசை வெளுத்து வாங்கியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

குறிப்பாக, ‘தேசியக் கட்சிகளை நம் கூட்டணியில் அங்கம் வைத்துக்கொள்கிறோம். அவர்கள் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துவிடுகிறார்கள். பிறகு தமிழ்நாட்டுக்கு விரோதமாகச் செயல்படுகிறார்கள். இதனால் நாம் பாதிப்படைகிறோம். தேசியக் கட்சிகளை நம்பிப் பயனில்லை. பா.ஜ.க-வுடன் இனி கூட்டணியில்லை என்பதைத் தெளிவுபடுத்திவிட்டோம். தமிழ்நாடு அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததாகச் சரித்திரமே இல்லை. மத்தியில் காங்கிரஸ் ஆண்டாலும் சரி, பாஜக ஆண்டாலும் சரி… தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதான் பார்க்கிறார்கள். மத்திய அரசு மனிதாபிமானத்தோடு நடந்துகொண்டு, மாநில அரசு கேட்ட நிதியைக் கொடுக்க வேண்டும்” என்று மத்திய அரசைச் சாடியிருந்தார்.

‘மத்திய பாஜக அரசை நேரடியாக விமர்சனம் செய்தால், தேவையில்லாத நெருக்கடி வரும் என்று உணர்ந்ததால்தான், 10 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த காங்கிரஸ் ஆட்சியையும் சேர்த்து ‘மத்திய அரசு’ எனப் பொதுவாக விமர்சனம் செய்து சால்ஜாப்பு செய்திருக்கிறார் எடப்பாடி’ என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. இருப்பினும், எடப்பாடியின் இந்த விமர்சனம் அ.தி.மு.க-வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலான எடப்பாடியின் பேச்சு, உறுப்பினர்களைச் சற்று சோர்வடையச் செய்துவிட்ட காட்சியையும் நம்மால் காண முடிந்தது.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பேச்சு குறித்து அவருக்கு நெருக்கமான ஒரு முன்னாள் அமைச்சரிடம் பேசினோம். “பொதுக்குழுவில் எடப்பாடி பேசியதைத் தேர்ந்த அரசியல்வாதியின் பேச்சாகத்தான் நாங்கள் பார்க்கிறோம். பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருந்ததாலேயே பல பாதிப்புகளை அ.தி.மு.க சந்தித்திருக்கிறது. இதைச் சரிசெய்ய பா.ஜ.க-வுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதுதான் ஒரே வழி என்று தலைமைக் கழக நிர்வாகிகள், சீனியர்கள் ஆலோசனை செய்து எடுத்த முடிவின்படிதான், கூட்டணி முறிக்கப்பட்டது. அதற்காகவே பா.ஜ.க-வை தி.மு.க-போல விமர்சிக்க வேண்டுமென்று அவசியமில்லை. அதில் எடப்பாடி மிகத் தெளிவாக இருக்கிறார். பா.ஜ.க-வுடனான மோதலுக்கு இடையே, அ.தி.மு.க-வை இழுக்க நினைக்கிறது தி.மு.க. அதனால்தான், பா.ஜ.க-வுடன் கூட்டணி முறிந்தாலும் விமர்சனம் செய்யவில்லை என்கிறது தி.மு.க. கடந்தகாலங்களில் மத்திய அரசுடன் அ.தி.மு.க-வுக்கு ஏற்பட்ட உரசலை, வேடிக்கை மட்டுமே பார்த்தது தி.மு.க.

2011-12 அம்மா ஆட்சியின்போது தமிழ்நாட்டில் பெய்த கனமழைக்காக 5,248 கோடி ரூபாய் நிவாரணம் கேட்கப்பட்டது. ஆனால் கொடுத்தது வெறும் 500 கோடி. 2012-13-ல் வறட்சி நிவாரணமாக 19,988 கோடி ரூபாய் கேட்டபோது 655 கோடி ரூபாய்தான் கொடுத்தார்கள். இந்தக் காலகட்டத்தில் தி.மு.க மத்திய காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்திருந்தது. தமிழ்நாட்டுக்காக எதையும் கேட்கவில்லையே… கூடுதல் நிதி கொடுங்கள் என்று கேட்டார்களா… இல்லையே… ஆனால், இப்போது மட்டும் அ.தி.மு.க கேட்க வேண்டுமென்று திமுக சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது… தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்காத காங்கிரஸ், பா.ஜ.க-வை விமர்சனம் செய்யும் எடப்பாடி, நிதி கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார்.

எடப்பாடி பழனிசாமி

இதேபோல, தமிழ்நாடு நலன் கருதி தி.மு.க பேசுமா… பேசாது. மாநில நலன் கருதித்தான் இதையெல்லாம் அ.தி.மு.க செய்கிறது. இதனால் டெல்லியிலிருந்து பிரச்னை வரத்தான் செய்யும். அதைச் சமாளிக்கத் தயாராக இருக்கிறோம். காஷ்மீர் விவகாரம், நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல் குறித்தெல்லாம் திமுக பேசுகிறது. அமளி செய்து அவையை முடக்குகிறது. ஆனால், நீட் தொடர்பாகவோ, தமிழ்நாட்டின் பிரச்னை தொடர்பாகவோ இதுவரை எப்போதாவது பேசி, அவையை முடக்கியிருக்கிறார்களா… உண்மையில் தேசிய நீரோட்டத்தில் கலக்கத்தான் தி.மு.க முயற்ல்கிறதே தவிர, தமிழ்நாட்டு மக்களைப் பற்றி யோசிப்பதே இல்லை. இதைத்தான் எடப்பாடி பொதுக்குழுவில் நீண்ட உரையாகப் பேசியிருக்கிறார். இதைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் பேச முயற்சி செய்தால், அது கழகத்தாரைச் சென்றடையாது. எனவே, கூடுதல் நேரம் அவசியம்தான்” என்றவர்…

“எடப்பாடியைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகள் வேண்டாம். மக்களுடன் கூட்டணி அமைப்போம் என்று நினைக்கிறார். அதனால்தான் தேசியக் கட்சிகளை விமர்சனம் செய்த எடப்பாடி பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை என்று தெளிவுபடுத்தயிருக்கிறார். இதேபோல, தி.மு.க சொல்லுமா?’ என்ற கேள்வியோடு முடித்துக்கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி

2022-ம் ஆண்டு, ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது ஒற்றைத் தலைமை விவகாரம் இருந்ததால், கட்சியின் சட்டங்களைத் திருத்தும் தீர்மானங்களே அதிகமாக இருந்தன. தற்போதைய பொதுக்குழுவில், நிறைவேற்றப்பட்ட 23 தீர்மானங்களில் திமுக அரசுக்கு எதிராக மட்டும் 17 கண்டனத் தீர்மானங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

திமுக அரசை விமர்சனம் செய்ததோடு, `மத்திய அரசு’ என காங்கிரஸ், பாஜக-வைச் சேர்த்து விமர்சனம் செய்து, தமிழ்நாட்டு மக்கள் நலன்தான் அதிமுக-வுக்கு முக்கியமென்று எடப்பாடி முன்வைக்கும் எடப்பாடியின் பிளான் எடுபடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/NcYdfao