அண்டை தேசமாக இருந்த ரஷ்யா இப்போது உக்ரைனுக்கு எதிர் துருவமாக மாறியுள்ளது. போர், வன்மம், வதை என 22 மாத படையெடுப்பில் நிகழ்த்தப்பட்ட அத்தனை மனித உரிமை மீறல்கள், உக்ரைன் மக்களின் கண்களில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.
நீங்கள் எங்களிடத்தில் இருந்து எதை வேண்டுமானாலும் பறித்துக் கொள்ள முடியும்; ஆனால் எங்களின் கொண்டாட்டங்களை ஒருபோதும் உங்களால் சீர்குலைத்துவிட முடியாது என உக்ரைன் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரஷ்ய படையெடுப்பின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக தங்களது கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டத்தை முதன்முறையாக டிசம்பர் 25 அன்று கொண்டாடி உள்ளனர்.
ரஷ்யாவை போல உக்ரைனும் கிறிஸ்துமஸை ஜனவரி மாதமே இதுவரையில் கொண்டாடி வந்திருக்கிறது. ஜூலை மாதம் விளாடிமிர் ஜெலென்ஸ்கி இதனை மாற்றி சட்டத்தில் கையெழுத்திட்டார்.
இதனை பெருமளவு மக்கள் ஆதரித்தாலும் உக்ரைனின் இரண்டு திருச்சபைகளில் ஒன்றான ஜூலியன் நாள்காட்டியில் குறிக்கப்பட்ட ஜனவரி மாத கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை விடவில்லை.
உக்ரைன் தலைநகர் கீவ்வில் (Kyiv) கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடந்தன. மக்கள் கூட்டம் நிரம்பி வழிய தங்களது எதிர்ப்பின் ஒருமித்த குரலாக கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.
கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட மக்கள், `அண்டை நாட்டில் இருந்து எங்கள் மக்களையும், வீடுகளையும், நிலங்களையும் சிதைத்த மக்களிடமிருந்து எங்களை தனித்துவமாக காட்ட இதைச் செய்தோம்’ எனக் கூறியுள்ளனர்.

செயின்ட் சோபியா கதீட்ரல் முன் எடுக்கப்பட்ட வீடியோவில் தனது நாட்டு மக்களிடம் ஜெலென்ஸ்கி உரையாற்றினார். அவர் சோஷியல் மீடியாவில் வெளியிட்ட பதிவில், `கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவுகள் அந்த ஆண்டிலேயே மிக நீளமானவை. இருந்தாலும் நாள் நீண்டு வெளிச்சம் மேலெழத்தொடங்கி இருக்கிறது.
படிப்படியாக இருள் பின்வாங்குகிறது. இருள் விலகி, தீமை தோற்கடிக்கப்படும். இதுவே நமது பொதுவான குறிக்கோள் மற்றும் விருப்பம். இதற்காகவே நாம் பிரார்த்தனை செய்கிறோம்.
நம்முடைய சுதந்திரத்திற்காக. நம்முடைய வெற்றிக்காக. நம்முடைய உக்ரைனுக்காக. கிறிஸ்து பிறந்தார், அவரை கொண்டாடுவோம்’ என்று பதிவிட்டுள்ளார்.
போர்கள் ஒழிய நேசம் பிறக்க இந்தாண்டு கிறிஸ்துவோடு சேர்ந்து உக்ரைனுக்கு விடுதலையும் பிறக்கட்டும்!
from Tamilnadu News https://ift.tt/U4pREwC
