உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் இந்த மாதம் 22-ம் தேதி, ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவானது நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், அன்றைய தினம் இந்தியா முழுவதுமுள்ள நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டுமென, இந்திய பார் கவுன்சில், இந்தியத் தலைமை நீதிபதிக்குக் கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இது தொடர்பாக டி.ஒய்.சந்திரசூட்டுக்குக் கடிதம் எழுதியிருக்கும் பார் கவுன்சில் தலைவரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான மனன் குமார் மிஸ்ரா, “வரும் 22-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

இந்த விடுமுறையானது, அயோத்தியில் நடைபெறும் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்கோ அல்லது விழாவினை கண்காணிக்கவோ வழிவகை செய்வதோடு… நாடு முழுவதும் நடைபெறும் பிற நிகழ்வுகளில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களைப் பங்கேற்க அனுமதிக்கும். அவசர விசாரணை தேவைப்படும் வழக்குகளுக்குச் சிறப்பு ஏற்பாடோ அல்லது வேறு தினத்தில் விசாரிக்க ஏதுவாக தள்ளிவைக்கவோ செய்யலாம்.
இந்தக் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து, மக்களின் உணர்வுகளுடன் இணங்கும் வகையில், இந்த வரலாற்று நிகழ்வைக் கொண்டாட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதுமிருந்து அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள், துறவிகள் மற்றும் ஆன்மிக ஆர்வலர்கள் என 7,000 பேர், இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவுக்குத் தலைமையேற்று, கோயிலைத் திறந்து வைக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/DyQGXjf
