நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. அத்தோடு அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான நாளும் நெருங்கிக்கொண்டிருக்கிறது. ராமர் கோயில் வேறு, நாடாளுமன்றத் தேர்தல் வேறு என்று இரண்டையும் பிரித்துப் பார்க்க இயலாத அளவுக்கு, 1990 முதல் கடந்த 30 ஆண்டுக்காலத்தில், தேசிய அளவில் இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவோம் என்பது பா.ஜ.க-வின் கடந்த 30 ஆண்டுகால முக்கிய முழக்கங்களில் ஒன்று.

திருப்பதியில் பிரதமர் மோடி

மோடி தலைமையிலான அரசு, தனது 2-வது ஆட்சிக்காலத்தில் அதைச் செய்தும்விட்டது. ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி முன்னிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளும் இந்த திறப்பு விழா, கிட்டத்தட்ட ஓர் அரசு விழாவாக முன்னெடுக்கப்படுகிறது. பா.ஜ.க-வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ்,“மதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படாத ராமர் கோயிலுக்கு, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களால் திறப்பு விழா நடத்தப்படுகிறது. இது அப்பட்டமாக தேர்தல் ஆதாயத்திற்காக கொண்டாடப்படுகிறது என்பதையும் மக்கள் அறிவார்கள். ஆர்.எஸ்.எஸ்-ஸின் நீண்டகால திட்டத்தை பா.ஜ.க செயல்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டு விழாவை புறக்கணித்திருக்கிறது.

ராகுல் காந்தி – மம்தா பானர்ஜி –

சிபிஐ-எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, “மதச்சார்பின்மை என்பது அரசு மற்றும் அரசிலிருந்து மதத்தைப் பிரிப்பது என அரசியல் சாசனம் தெளிவாக வரையறுக்கிறது. ஆனால், ராமர் கோயில் திறப்பு விழா அரசியல் சாசனத்தின் கொள்கைகளுக்கு முரணாக, மதத்தின் வெளிப்படையான அரசியலை பிரதிபலிக்கிறது. ராமர் கோயில் திறப்பு விழா, அரசு நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. இந்த அரசியல் மயமாக்கல் சரியல்ல. அது அரசியல் ஆதாயத்துக்கான கருவியாக மாற்றப்படக் கூடாது. மக்களின் மத உணர்வுகளைத் தவறாகப் பயன்படுத்துவதாக நாங்கள் உணர்கிறோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி,“மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஒற்றுமையைப் பற்றி பேசும் விழாக்களை நான் நம்புகிறேன். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராமர் கோயில் தொடக்க விழாவின் மூலம் பா.ஜ.க வித்தை காட்டி வருகிறது. மற்ற சமூகங்களை ஒதுக்கி வைக்கும் விழாக்களை நான் ஆதரிப்பது கிடையாது” எனத் தெரிவித்திருந்தார்.

விகடன் கருத்துக் கணிப்பு

கர்நாடக முதல்வர் சித்தராமையா, “நான் ஓர் இந்து, ஆனால் மதவாதத்தையும் இந்துத்துவாவையும் எதிர்க்கிறேன். எந்த மதமும் கொலையை ஆதரிக்கவில்லை… ஆனால் இந்துத்துவா கொலை மற்றும் மக்களிடம் பிரிவினைவாதத்தை ஆதரிக்கிறது. ராமர் கோயில் கட்டுவதை எப்போதும் எதிர்த்ததில்லை. ஆனால், அதை அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துவதைத்தான் எதிர்த்துக் கேள்வி கேட்கிறோம்” எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இதைத் தொடர்ந்தே நமது விகடன் வலைதளப்பக்கத்தில்,“அயோத்தி ராமர் கோயிலை வைத்து பா.ஜ.க அரசியல் செய்வதாக எதிர்கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டு” குறித்து கருத்துக் கணிப்பு நடத்தினோம்.

விகடன் கருத்துக் கணிப்பு முடிவுகள்

இதற்கு “சரி” – “தவறு” – “கருத்து இல்லை” என்ற மூன்று விருப்பத்தேர்வுகளையும் கொடுத்திருந்தோம். இந்த கருத்துக்கணிப்பில் கலந்துக்கொண்டு வாக்களித்த வாசகர்களில், ‘சரி என 72’ சதவிகித வாசகர்களும், ‘தவறு என 25’ சதவிகித வாசகர்களும், ‘கருத்து இல்லை என 3’ சதவிகித வாசகர்களும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/KDLu0NC