மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருக்கும் பிரதமர் மோடி, சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைப்பதுடன் ராமேஸ்வரம், ஶ்ரீரங்கம் என முக்கியமான கோயில்களுக்கும் செல்கிறார். ராமர் கோயில் கும்பாபிஷேகம், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மோடியின் இந்தப் பயணம் வெறுமனவே ஆன்மீகப் பயணமாக மட்டுமேயல்லாமல் அரசியல் பயணமாகவும் அமைந்திருப்பதாக கருத்து தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

ஒரே மாதத்தில் இரண்டுமுறை தமிழ்நாட்டுக்கு வருகை…!
தேர்தல் நெருங்கும்போதெல்லாம் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டுக்கும் பிரதமர் மோடி வருகை புரிந்து, பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கடந்த ஜனவரி 2-ம் தேதி தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, திருச்சியில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சியில், சுமார் 19,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அர்ப்பணித்தார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக ஜனவரி 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். இந்தப் பயணத்தின் முதல் நாளில் `கேலோ இந்தியா’ இளையோர் விளையாட்டு போட்டிகளை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் கலந்துகொள்ளும் அத்தனை நிகழ்வுகளும் ஆன்மிகப் பயணமாகவும் அதேசமயம் அரசியல் நகர்வுகளாகவும் பார்க்கப்படுகின்றன.
ஆளுநர் மாளிகையில் ஆலோசனை:
ஜனவரி 19, கேலோ இந்தியா தொடக்க விழாவில் பங்கேற்ற பிறகு கிண்டி ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களை சந்தித்து மோடி ஆலோசனை நடத்தவிருப்பதாகவும், இதில் தமிழ்நாடு அரசியல் சூழ்நிலைகள் குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும், நேற்றிரவு ஆளுநர் மாளிகையிலேயே தங்கி ஓய்வெடுத்தார் மோடி.

ராமாயணத் தலங்களுக்கு விஜயம்:
இரண்டாம் நாளில் (ஜனவரி 20) சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பிரதமர் மோடி, ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்தார். ஶ்ரீரங்கத்தைப் பொறுத்தவரையில், கம்பர் தமிழில் இயற்றிய ராமாயணத்தை முதன்முதலில் அரங்கேற்றம் செய்த தலமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ராமாயணத்துடன் பல்வேறு சம்பவங்களிலும் ஶ்ரீரங்கம் கோயில் தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது. குறிப்பாக, ராமர் உள்பட அயோத்தியை ஆண்ட அத்தனை மன்னர்களுக்கும் ஶ்ரீரங்கம் கோயில்தான் குலதெய்வமாக இருந்திருப்பதாக கோயில் பட்டர்கள் தெரிவிக்கின்றனர். எனவேதான் பிரதமர் மோடி ஶ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வதோடு, கம்ப பாராயணமும் கேட்டார். ஏற்கெனவே பிரதமர் மோடி, ராமாயணத்துடன் தொடர்புடைய ஆந்திராவின் வீரபத்ரா கோயிலில் வழிபாடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ராமேஸ்வரத்தில் பூஜை:
அயோத்திக்குப் பிறகு ராமருக்கு மிகவும் தொடர்புடைய ஒரு இடமென்றால் அது தமிழ்நாட்டிலிருக்கும் ராமேஸ்வரம்தான். இங்கிருந்துதான் சீதையை மீட்க ராமர் இலங்கைக்கு பாலம் அமைத்து நடந்து சென்றார் என இதிகாச புராணத்தில் கூறப்படுகிறது. எனவே, ஶ்ரீரங்க தரிசனத்தை முடித்த கையோடு ராமேஸ்வரத்துக்குச் செல்லும் மோடி, ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். இலங்கைக்கு ராமர் செல்லும்போது கோயில் கட்டி வழிபட்டத் தலமாக இந்தக் கோயில் கருதப்படுகிறது. எனவே ராமேஸ்வரம் கோயிலில் தரிசனம் செய்யும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருக்கிறார். அதன்பிறகு, ஶ்ரீ ராமகிருஷ்ணர் மடத்துக்கு சென்று அன்றிரவு ஓய்வெடுக்கிறார்.
அயோத்திக்கு செல்லும் புனித தீர்த்தம்:
இறுதியாக, மூன்றாவது நாளான, ஜனவரி 21-ம் தேதி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடும் பிரதமர் மோடி, ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார். பின்னர், இலங்கைக்கு பாலம் அமைக்கப்பட்டதாக கூறப்படும் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்கிறார். அதைத்தொடர்ந்து கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். ராமேஸ்வரத்தில் வெறுமனவே வழிபாட்டை மட்டும் மேற்கொள்ளாமல் மற்றொரு விஷயத்தையும் மோடி மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது, மறுநாள் அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது என்பதால், ராமேஸ்வரத்திலிருந்து புனித நீரை எடுத்துக்கொண்டு, அதை அயோத்திக்கு கொண்டு செல்லப்போகிறார் பிரதமர் மோடி என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

ஆன்மிகத்தின் பின்னணியில் அரசியல்!
ஆகமொத்தம், “பிரதமர் மோடி தமிழ்நாட்டில் மேற்கொண்டிருக்கும் மூன்றுநாள் பயணம் `அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையே’ முன்வைத்து இருக்கிறது. இந்திய வரலாற்றில் அயோத்தி ராமர் கோயில் என்பது ஆன்மிகத்தைத் தாண்டி அரசியலாகவே பார்க்கப்படுகிறது. அதாவது ஆர்.எஸ்.எஸ் பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் `இந்துத்துவ அரசியல்’ அடிநாதமாக கடந்த தசாப்தங்களில் இருந்து வந்திருக்கிறது. 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் மிகப்பெரிய வாக்குறுதியாக இருந்தது அயோத்தி ராமர் கோயில் கட்டமைப்பதுதான்! இந்த நிலையில், சொல்லியபடியே ராமர் கோயிலை கட்டிமுடித்து, பிரதமர் மோடியை பிரதானமாக வைத்து கும்பாபிஷேகத்தையும் நடத்தவிருக்கிறது பா.ஜ.க அரசு. இந்த வெற்றியையையே தேர்தல் பிரச்சாரமாகக் கையாண்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்துக்களின் வாக்குவங்கியைப் பெற பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது.

மேலும், ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளாத எதிர்கட்சிகளை விமர்சிக்கும் வாய்ப்பையும் இதன்மூலம் பலமாக பெற்றிருக்கிறது பா.ஜ.க. ஆக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் பிரசார தேர்தல் அஸ்திரம் ராமர் கோவிலை முன்வைத்துதான். மேலும், பா.ஜ.கவின் செல்வாக்கு பின்தங்கியிருக்கும் தென்மாநிலங்களைக் குறிவைத்து, குறிப்பாக தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை அதிகரிக்கச்செய்ய `ராமர் அரசியலை’ தமிழ்நாட்டிலும் இதன்மூலம் புகுத்தத்தொடங்கியிருக்கிறது.” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
தமிழகம் என்றைக்குமே பா.ஜ.க. எதிர்ப்பு பூமி!
இந்த நிலையில், மோடியின் `ராமேஸ்வரம் டு அயோத்தி’ ராமர் அரசியலை விமர்சித்திருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காட்டமான அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், “2014 மக்களவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி, எல்லாவற்றையும் மூடி மறைப்பதற்கு ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் கும்பாபிஷேகத்தை தன்னை மையப்படுத்தி நிகழ்த்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் 2024 மக்களவை தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட முனைப்பு காட்டுகிறார். சென்னை மாநகரில் கேலோ இளைஞர் விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கும், அதேநேரத்தில் ஸ்ரீரங்கம், ராமநாதபுரம் உள்ளிட்ட கோவில்களுக்கு ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு அரசியல் ஆதாயத்தோடு மோடி செயல்பட்டு வருவது வெளிப்படையாக தெரிகிறது. தமிழக மக்களை கடந்த ஒன்பதரை ஆண்டுகாலமாக வஞ்சித்து செயல்பட்டு வருகிற பிரதமர் மோடியினுடைய ஆன்மிக சுற்றுப் பயணத்தின் மூலம் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழக மக்கள் சிக்க மாட்டார்கள். தமிழகம் என்றைக்குமே பா.ஜ.க. எதிர்ப்பு பூமியாகவே இருந்து வருகிறது.
உள்துறை மந்திரி அமித் ஷாவை சமீபத்தில் சந்தித்த மக்களவை உறுப்பினர்கள் ரூபாய் 37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரியிருந்தார்கள். ஆனால், இதுவரை எந்த நிதியும் ஒதுக்காமல் பா.ஜ.க. அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட வெள்ள பகுதிகளை பார்வையிட்ட நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தமிழகத்தின் பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது, நிதியும் தர முடியாது என்று ஆணவத்தோடு பேசியதை அனைவரும் அறிவார்கள்.எனவே, தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக மக்கள் மிகுந்த கொந்தளிப்பான நிலையில் இருந்து வருகிறார்கள். இதை மூடி மறைக்கிற வகையில் பிரதமர் மோடியின் ஆன்மீக பயணத்தின் மூலம் தமிழக மக்களிடம் ஆதரவை திரட்டுகிற முயற்சியில் படுதோல்வி அடைவது உறுதி!” என்று கூறியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/NyY7QPB
