கோவை பா.ஜ.க சார்பில் ரேக்ளா போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பரிசுகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “கலைஞர் கருணாநிதி பெயரில் ஏறு தழுவுதல் மைதானம் திறந்து வைத்தபோது, முதலமைச்சர் ஸ்டாலின் நிறைய பொய்களை பேசியுள்ளார். ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடக்க காரணம் மோடிதான். 2006-ம் ஆண்டு ரேக்ளா போட்டிக்கு முதலில் தடை விதிக்கப்பட்டது. ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டை காட்டு மிரண்டி விளையாட்டு என்றார். காங்கிரஸ் ஆட்சியில் காட்சிபடுத்தக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளையையும் சேர்த்தார்கள்.

ரேக்ளா ரேஸ்

அதனால் ஜல்லிக்கட்டு, ரேக்ளா உள்ளிட்டவை தடை செய்யப்பட்டது. இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்தவர் ஸ்டாலின். காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையில் இருந்து பா.ஜ.க அரசு காளையை நீக்கியது. மத்திய பா.ஜ.க அரசு ஆதரவால்தான் ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை மீதான தடை நீங்கியது. தடைக்கு காரணமாக இருந்த கலைஞர் கருணாநிதி பெயரை ஏறு தழுவுதல் மைதானத்திற்கு வைக்கக் கூடாது.

முரண்பாடு இல்லாதவர்கள் ஒரு கூட்டணியில் இருக்கிறார்கள். இண்டியா கூட்டணியில் மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியானாவில் முரண்பாடுகள் உள்ளது. இண்டியா கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பிரச்னையே, நிதிஷ் குமார் வெளியேற காரணம். இண்டியா கூட்டணி ஆரம்பிக்கவும், மற்ற கட்சிகளை சேர்க்கவும் காரணம் நிதிஷ் குமார் தான். அவரே வெளியே வந்துவிட்டார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்பதை, இது காட்டுகிறது. மோடி எதிர்ப்பு என்ற ஒரே அஜெண்டாவை தவிர வேறு எந்த கொள்கையும் இண்டியா கூட்டணிக்கு இல்லை. தமிழக அரசு செயல் இழந்துள்ளது.

நிதிஷ் குமார்

கேரள ஆளுநர் தர்ணா செய்த பிறகு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் ஆளுநர் எது பேசினாலும் குற்றம் கண்டுபிடிக்கிறார்கள். தமிழிசை சௌந்தரராஜனிடம் வம்படி சண்டை செய்கிறார்கள். அரசியலமைப்பு சட்டப்படி அரசியல் அதிகாரம் முதல்வருக்குத்தான் உள்ளது. விதிமீறலைத்தான் ஆளுநர் பார்க்கிறார். ஆளுநர் உடன் மோதல் போக்கை கடைபிடிப்பது நல்ல அரசியல் அல்ல. பினராயி விஜயன், ஸ்டாலின் ஆகியோர் ஆளுநர் குறித்து பயன்படுத்தும் வார்த்தைகள் ஏற்புடையது அல்ல.

வேங்கைவயல், தி.மு.க எம்.எல்.ஏ மகன் வீட்டில் பெண்ணுக்கு நடந்த சித்ரவதை, இரட்டை டம்ளர் பிரச்னை, தமிழகத்தில் அதிக வன்கொடுமை வழக்குகள் பதிவாவது பற்றி திருமாவளவன் பேசவில்லை. மற்றவர்கள் தாக்கிப் பேசப்பேச நாம் வளர்கிறோம் என அர்த்தம். திருமாவளவன் என்னை ஆட்டுக்குட்டி என்றது எனக்கு பெருமைதான். மத்திய அமைச்சரவையில் 76 அமைச்சர்களில் 12 பேர் பட்டியலினத்தவர். அதுவே தமிழகத்தில் 35 பேரில் 3 பேர் மட்டுமே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். அதனால் ஸ்டாலினை கண்டிக்கிறோம் என திருமாவளவன் தீர்மானம் போட்டிருக்க வேண்டும்.

திருமாவளவன்

திருமாவளவன் போட்ட தீர்மானங்கள் எல்லாம் பச்சை பொய். 2, 3 சீட்டுக்காக நாடகம் போட்டுள்ளார். சமூகநீதி பற்றி பேச திருமாவளவனுக்கு தகுதியில்லை. அவர் ஓர் அரசியல் வியாபாரி. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பா.ஜ.க-வை கண்டால் பயம். பா.ஜ.க இப்படி, அப்படி என பேசுவதுதான் அவர் வேலை. களத்தில் வியர்வையை சிந்தி நாங்கள் வேலை செய்கிறோம். கள நிலவரம் என்ன என எங்களுக்கு தெரியும்.

2024 தேர்தல் முடிவு வந்ததும் முதல்வர் கருத்து பற்றி பேசிக் கொள்ளலாம். எங்கள் கட்சிக்கு யாரும் அறிவுரை சொல்ல வேண்டாம். பங்காளி, பகையாளி என்பவர்கள் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்க்கட்டும். அ.தி.மு.க-வினர் அண்ணாமலையை மாற்ற சொல்லி டெல்லிக்கு சென்று நாடகம் நடத்தட்டும். தி.மு.க தீய சக்தியை அழிக்கும் குறிக்கோளோடு வேலை செய்கிறேன். இந்தியாவில் அதிக வெளிநாடு பயணம் செல்லும் முதல்வர் ஸ்டாலின் தான்.

ஸ்டாலின்

அவர் எதற்காக வெளிநாடு செல்கிறார் என்ற உண்மையை சொல்ல வேண்டும். விஜய் உட்பட யாரும் அரசியலுக்கு வரலாம். பல கோயில்கள் இருந்தாலும், அயோத்தி குழந்தை ராமர் கோயில் சிறப்பு வாய்ந்தது. இது ஆன்மிகம் பற்றி தெரிந்தவர்களுக்கு புரியும். ஆன்மிகம் தெரிந்த மாதிரி பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு புரியாது” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/f7jIPUy