பீகாரில் இன்று நிதிஷ் குமார், எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கிறார். இன்று மாலை பா.ஜ.க துணையோடு மீண்டும் முதல்வராகப் பதவியேற்கிறார். அவருடன் சேர்ந்து பா.ஜ.க-வைச் சேர்ந்த இரண்டு பேர் துணை முதல்வர்களாகப் பதவி ஏற்கின்றனர். நிதிஷ் குமார் ஒரு நேரத்தில் பீகார் வளர்ச்சியின் தலைவராக இருந்தார். ஆனால், இப்போது அடிக்கடி அணி மாறும் தலைவராக மாறிவிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் ஐந்து முறை கூட்டணி மாறியிருக்கிறார். அப்படியிருந்தும் நிதிஷ் குமாரை, பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிறது. நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் முக்கிய தலைவராக இருந்தார். அவரை இந்தியா கூட்டணியின் அமைப்பாளராக நியமிக்க முடிவு செய்திருந்தனர்.

ஏற்கெனவே மம்தா பானர்ஜி மற்றும் ஆம் ஆத்மி கட்சி, மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போகிறோம் என்று சொல்லி, இந்தியா கூட்டணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிதிஷ் குமாரை இந்தியா கூட்டணியில் இருந்து தூக்கிவிட்டால், அந்தக் கூட்டணி சலசலத்துப் போய்விடும் என்று பா.ஜ.க கணக்கு போட்டுள்ளது. எனவேதான் மக்களவைத் தேர்தலில் நிதிஷ் குமாருக்குக் கூடுதலாக சில தொகுதிகளைக் கொடுத்து பா.ஜ.க தங்களது பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிறது. அதோடு பீகாரில் இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக இருந்தது.
எனவே அந்தக் கூட்டணியை உடைத்தால் மட்டுமே, தங்களால் அங்கு அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்று கணக்கு போட்டு, நிதிஷ் குமாரை பா.ஜ.க தூக்கியிருக்கிறது. நிதிஷ் குமாரின் செல்வாக்கு 2010-ம் ஆண்டிலிருந்து சரிய ஆரம்பித்துவிட்டது. 2010-ம் ஆண்டு ஐக்கிய ஜனதா தளம் சட்டமன்றத் தேர்தலில் 115 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது 2015-ம் ஆண்டு தேர்தலில் 71 தொகுதிகளாக குறைந்தது. 2020-ம் ஆண்டு இது 43 தொகுதிகளாக குறைந்துவிட்டது. நாளுக்கு நாள் நிதிஷ் குமாரின் செல்வாக்கு சரிந்து வருவதைக் கண்கூட காணமுடிகிறது. ஆனாலும் பீகாரில் நிதிஷ் குமாரின் கட்சி, மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது.

எனவே முதல்வர் பதவியில் நிதிஷ் குமார் இருந்தாலும், அவரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்சி நடத்த முடியும் என்று பா.ஜ.க கணக்கு போட்டுள்ளது. எனவே எப்படி பார்த்தாலும் நிதிஷ் குமாரின் வரவு பா.ஜ.க-விற்கு லாபமாகத்தான் அமையும். மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவைப்போல் எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க மேற்கொண்ட முயற்சி, பீகாரில் பலனலிக்கவில்லை. எனவேதான் வேறு வழியில்லாமல் நிதிஷ் குமாரிடம் இறங்கிப்போகவேண்டிய நிலைக்கு பா.ஜ.க தள்ளப்பட்டது.
மற்றொரு புறம் நிதிஷ் குமாரை வெளியில் கொண்டு வருவதன் மூலம், பொதுமக்கள் மத்தியில் இந்தியா கூட்டணி நிலையற்றது என்ற ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கவேண்டும் என்பதும், பா.ஜ.க-வின் திட்டமாகும். நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியிலிருந்து விலகியிருப்பது, அந்த அணிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது.
from Tamilnadu News https://ift.tt/5CmesQI
