நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்தச் சூழலில் அரசியல் கட்சிகள் பல கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என வேகமெடுக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த நிலையில் விஜயகாந்த் மறைந்த துக்கத்திலிருக்கும் தேமுதிக, நாடாளுமன்றத் தேர்தலில் என்ன செய்யவிருக்கிறது என விசாரித்தோம்.
“தே.மு.தி.க-வின் ஒட்டுமொத்த அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். பொதுச்செயலாளராகப் பதவியேற்று பிரேமலதா சந்திக்கும் முதல் தேர்தல் களம் இது. குறிப்பாக விஜயகாந்த் மறைந்து இறுதிச்சடங்குகள் முடிந்த கணமே, `விஜயகாந்த்தின் கனவை நினைவாக்குவோம்’ என்று சூளுரைத்த பிரேமலதாவின் அரசியல் நகர்வுகளை திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் உற்று நோக்கின.

விஜயகாந்த்தின் இறுதிச்சடங்கின் சில நிகழ்வுகளில் தி.மு.க-வின் நடவடிக்கைகளின்மீது வருத்தம் தெரிவித்து தி.மு.க-வுடன் கூட்டணி போக விரும்பவில்லை என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திவிட்டார் பிரேமலதா. மறுபக்கம் திமுக தரப்பிலும் கூட்டணி கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதால், இவர்களுக்கு அங்கும் வாய்ப்பில்லை.
விஜயகாந்த் மறைவால் தே.மு.தி.க-மீது ஏற்பட்டிருந்த அனுதாப அலை அந்தக் கட்சிக்குக் கைகொடுக்கும் என நம்பப்படுவதால் தே.மு.தி.க-வுக்காகக் கதவைத் திறந்தே வைத்திருக்கின்றன அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும்“ என்கிறார்கள் விவரமறிந்த சிலர்.
“ `பா.ஜ.க-வுடன் கூட்டணியை முறித்துவிட்டு மெகா கூட்டணி அமைப்போம்’ எனச் சொன்ன அ.தி.மு.க., அதை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்துவருகிறது. குறிப்பாக, பாஜக-வைக் கழற்றிவிடுவதன் மூலம் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தங்களின் பக்கம் திரும்பும் எனவும் கணக்கு போட்டது அதிமுக. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. ஆகவே பா.ம.க., த.மா.கா., தே.மு.தி.க ஆகிய கட்சிகளை எப்படியாவது இணைத்துவிட வேண்டும் எனத் திட்டமிடுகிறது அ.தி.மு.க.
தேர்தலுக்காக எடப்பாடி நியமித்திருக்கும் குழுவில் இவை விவாதிக்கப்பட்டிருக்கின்றன. மறுபக்கம், விஜயகாந்த்துடனான நினைவுகளை மையப்படுத்தி பிரதமர் மோடி எழுதியிருந்த கட்டுரை, தே.மு.தி.க-வை பா.ஜ.க-வுக்கு அருகே நெருங்கவைத்திருக்கிறது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

தே.மு.தி.க-வின் உயர்மட்டக்குழு நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில், கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர், வடசென்னை ஆகிய நான்கு தொகுதிகளில் போட்டியிட்டது தே.மு.தி.க.
எதிலும் வெற்றிபெறவில்லை. அதுபோல, இந்த முறை நடந்துவிடக் கூடாது என நினைக்கிறோம். ஆகவே இந்த முறை எம்.பி பதவியைப் பெற்றுவிடுவது அவசியம். தேர்தலில் போட்டியிட்டு வெல்வதென்றால் அ.தி.மு.க-தான் ஓரே ஆப்ஷன். அப்படியில்லையென்றால் பா.ஜ.க-விடம் ஒரு ராஜ்ய சபா சீட்டும், ஒரு மத்திய அமைச்சர் பதவியும் பெற வேண்டும். இதில் பிரேமலதாவுக்கு அதீத விருப்பம் என்றாலும் டெல்லி எந்த சிக்னலும் தரவில்லை” என்றனர்.

செய்தியாளர் சந்திப்பில் கூட்டணி குறித்த கேள்வி எழுந்தபோது, “விஜயகாந்த் மறைந்து ஒரு மாத காலம்தான் ஆகியிருக்கிறது. ஆகவே, நான் அரசியல் பேச விரும்பவில்லை. ஒரு வார காலத்துக்குப் பிறகு நான் அது பற்றிப் பேசுவேன், உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பேன்” என முடித்துக்கொண்டார் பிரேமலதா விஜயகாந்த்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/QpWnAj3
