அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக-வில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு பின்னர், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அரசியல் செய்து வருகிறார். அதன்படி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க போட்டியிட ஆயத்தமாகி வந்தது.

இதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் தினகரன். விழுப்புரத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தினகரன், ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை’ என்று அறிவித்து இருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து அ.ம.மு.க தலைமைக்கழக நிர்வாகிகளுடன் பேசினோம்.
“2021 சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க வெற்றிப் பெற டெல்டா மாவட்டங்களில் பல தொகுதிகளில் வாய்ப்புகள் இருந்தன. அதில் ஒரு தொகுதியை தேர்வு செய்து களத்தில் இறங்க டிடிவி முடிவு செய்தார். ஆனால், அவருக்கு நெருக்கமான சிலரின் தவறான வழிகாட்டுதலால் வம்படியாக கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ-வை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார் டிடிவி. இதனால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் தொகுதிகளை தேர்வு செய்ய ஒரு குழு அமைத்தார் டி.டி.வி.

அவர் ஏற்கனவே பெரியகுளம் தொகுதியில் (தற்போது தேனி தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது) 1999-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எம்.பியாக வெற்றிப் பெற்று இருக்கிறார். அதேபோல 2004 ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் வெறும் 21,155 வாக்கு வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்தார். இதனால், தேனியில் போட்டியிடலாம் என்று ரிப்போர்ட் வந்தது. அதேபோல, சிவகங்கை, ராமநாதபுரத்திலும் வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதாக ரிப்போர்ட்டில் இருந்தது. இதனை மனதில் வைத்து, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கு சிறப்பு பொறுப்பாளர்களை நியமித்து தேர்தல் பணிகளை தொடங்கினார் டி.டி.வி.
இருப்பினும், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட டிடிவிக்கு சின்ன தயக்கமிருந்தது. ஏனென்றால், தான் போட்டியிட்டால் பிற தொகுதிகளுக்கு பிரசாரம் செய்ய முடியாது. அதுமட்டுமல்லாது, சட்டமன்றத் தேர்தலில் டிடிவியே தோல்வியடைந்ததால், அமமுக-வுக்கு வெற்றி என்பது தற்போது கட்டாயமான ஒன்றாகும். இந்நேரத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் நின்று, தானே தோல்வி அடையும் நிலை ஏற்பட்டால், கட்சியை மேலும் பலவீனப்படுத்திவிடும் என்று டிடிவி நினைத்தார்.

மேலும், அவர் போட்டியிட தேர்வு செய்த தேனியில் ஓ.பி.எஸ்-ஸின் மகன்களும் குறிவைத்து வேலைப்பார்க்கிறார்கள். இதை தாண்டி அங்கு நின்றால், உள்ளடி அரசியல் அதிகமாக இருக்கும் என்று எண்ணிய டிடிவி தேர்தலில் போட்டியிடவேண்டாம் என்று முடிவுக்கு வந்துவிட்டார். மேலும் தனது கவனம் சட்டமன்ற தேர்தலில் தான் இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறார் . இருப்பினும், அமமுக கட்சி நல்ல கூட்டணி அமைத்து தேர்தலில் நிச்சயம் போட்டியிடும்.” என்றனர் விரிவாக.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/3KJnVxb
