2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலையை வேகப்படுத்தியுள்ளனர். தி.மு.க, அ.தி.மு.க தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்ட நிலையில் பாஜக-வும் 9 தொகுதிகளை குறி வைத்து களமிறங்கியுள்ளது. பாஜக குறிவைத்த 9 எம்.பி தொகுதிகள் எவை… என்ன வியூகம் அமைத்திருக்கிறார்கள்…

கடந்தாண்டு செப்டம்பர் மாதம், அதிமுக – பாஜக கூட்டணி முறிந்த நிலையில் தமிழ்நாட்டில் என்ன செய்வதென தெரியாமல் இருந்துள்ளது டெல்லி பா.ஜ.க. அப்போது தமிழ்நாட்டில் அ.தி.மு.க இல்லாமலேயே நிற்கலாம். நம்மால் 15% வாக்குகளை பெற முடியும் என்றிருக்கிறார் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவரின் கூற்றை டெல்லி பா.ஜ.க-வால் ஏற்கவும் முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை.

எடப்பாடி பழனிசாமி

ஆகவே ஹைதராபாத் மாநில தேர்தல் வியூக வகுப்பாளர்களை கொண்டு மாநில பாஜக-வுக்கு தெரியாமல் ஒரு ஆய்வை நடத்தியிருக்கிறது டெல்லி. அதில் அண்ணாமலை சொன்ன 15% வாக்குகள் இல்லையென்றாலும் தமிழ்நாட்டில் பாஜக பலமாக உள்ள தொகுதிகள் சிலவற்றை அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. அந்த வகையில் 9 தொகுதிகளை தேர்வு செய்து களத்தை தயார்ப்படுத்தி வருகிறது பா.ஜ.க.

நம்மிடம் பேசிய விபரமறிந்தவர்கள் சிலர், “கொங்கு மற்றும் தென் தமிழகத்தில்தான் அதீத கவனம் செலுத்துகிறது பா.ஜ.க. கொங்கு பகுதியில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய தொகுதிகளும், தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், தென்காசி போன்ற தொகுதிகளும், அதைதாண்டி கிருஷ்ணகிரி மற்றும் தென்சென்னை தொகுதிகளிலும் கவனம் செலுத்துகிறது பா.ஜ.க.

அண்ணாமலை

இந்த தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்களை களமிறங்க வைத்து, பூத் கமிட்டி, கிளை கட்டமைப்பு மற்றும் சின்னத்தை பிரபலப்படுத்துவது, மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பது என பல்வேறு வேலைகளை தொடங்கியிருக்கிறது பா.ஜ.க” என்றனர்.

பாஜக திட்டம் குறித்து நம்மிடம் விரிவாக பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர், “கொங்கு பகுதிகளை பொறுத்தவரையில் திமுக வலுவாக இல்லாத களம், பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசனின் தொகுதியும் கோவை எம்.பி தொகுதிக்குள் வருகிறது, சமூக ரீதியான ஆதரவும் பா.ஜ.க-வுக்கு கிடைக்கும். குறிப்பாக அண்ணாமலை கொங்கு பகுதியை சார்ந்தவர். அதோடு மத்திய அமைச்சர் எல்.முருகனை வேட்பாளராக நீலகிரியில் களமிறக்கலாம் என பல்வேறு கணக்குகளோடு கொங்கு தொகுதிகளை குறிவைக்கிறது பா.ஜ.க” என்றனர்.

நயினார் நாகேந்திரன்

தொடர்ந்து பேசியவர்கள், “திருநெல்வேலியை பொறுத்தவரை நயினார் நாகேந்திரன் தெரிந்த முகமாக திகழ்கிறார். மேலும் அவர் எம்.எல்.ஏ-வாக தேர்வான தொகுதியும் அதனுள் வருகிறது. மேலும் முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு திட்டத்தால் சமூக ரீதியிலான வாக்குகள் பா.ஜ.க-வுக்கு கிடைக்கும் என கருதப்படுகிறது.

மேலும் கன்னியாகுமரி எப்போதுமே தேசிய நீரோட்டத்தில் இருக்கும் தொகுதி. அங்கே அ.தி.மு.க, தி.மு.க-வைவிட காங்கிரஸ், பா.ஜ.க-வுக்கே மவுசு அதிகம். எனவே பொன்.ராதாகிருஷ்ணனை மீண்டும் களமிறக்கி வெற்றிக்கான திட்டத்தை வகுப்பார்கள். தென்காசி தொகுதியை பொறுத்தவரை ஆனந்த என்பவரை வேட்பாளராக நிறுத்த பா.ஜ.க திட்டமிடுகிறது. தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றியதன் மூலம் அச்சமூக வாக்குகள் தென்காசி தொகுதியில் கிடைக்கும் என நம்புகிறது.

இதேபோல் ராமநாதபுரம் தொகுதியில் கடந்த மூன்று எம்.பி தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. மேலும் ராமேஸ்வரத்தை தமிழ்நாட்டின் ஆன்மிக பூமியாக பாவித்து பிரதமர் மோடி வரை வர வைத்திருக்கிறது தமிழ்நாடு பா.ஜ.க.

பிரதமர் மோடி – அண்ணாமலை

அதிலும் நல்ல வாக்குகளை பெறலாம் என்பது பா.ஜ.க-வின் கணக்கு. சமூக ரீதியிலான வாக்குகளும் பூத் கமிட்டி பணிகள் முழுமையாக முடித்திருப்பதால் தென்சென்னையும், முன்னாள் அ.தி.மு.க எம்.பி நரசிம்மன் என்பவரது முன்னெடுப்பிலும் கிருஷ்ணகிரியிலும் வேலை நடக்கிறது” என்றனர். மேலும் மத்திய சென்னையில் வினோஜ் களமிறங்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பா.ஜ.க-வினர் சிலரோடு பேசியபோது, “வெற்றி பெறுவது கடினம் என்றாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு கணிசமான வாக்குகள் உள்ளதென்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனை நோக்கி பாஜக பயணிக்கும்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/Yg791k4