போதைப்பொருள் மற்றும் விளையாட்டுத்துறையில் இளைஞர்கள் கவனக்குறைவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தனியார் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் தேனி மாவட்டக் காவல்துறை இணைந்து நடத்திய மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. தேனி பங்களாமேடு பகுதியில் துவங்கிய மாரத்தான் போட்டி மதுரை சாலை, புறவழிச்சாலை, அன்னஞ்சி விலக்கு, அல்லிநகரம் போன்ற பகுதிகளின் வழியாக மீண்டும் பங்களாமேடு பகுதியில் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அறிவிப்பு

இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போட்டியில் ஆண்கள் பெண்கள் என வயது வாரியாக ஐந்து பிரிவுகளின்கீழ் 6 கிலோ மீட்டர் முதல் 12 கிலோ மீட்டர் வரை போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றியாளர்களுக்கு 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை பரிசுத் தொகையுடன், சைக்கிள்கள் பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாரத்தான் போட்டி சரியான வழிமுறையின்றி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், பல்வேறு குளறுபடிகள் உள்ளதாகவும் கூறி, 300-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள், போட்டியில் பங்கேற்க வசூல் செய்த ரூபாய் 300 கட்டணத்தை திருப்பி வழங்கக் கோரி, தேனி பங்களாமேடு பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, தேனி நகரே ஸ்தம்பித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போட்டி ஏற்பாடு செய்தவர்கள் சாலையோரத்தில் வைத்திருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர். அப்பகுதியில் வெற்றியாளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த சைக்கிள்களை சில போட்டியாளர்கள் எடுத்துச் சென்றனர். தள்ளுமுள்ளு, கலவரம் ஏற்பட கூடிய சூழல் ஏற்பட்டதால் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து நம்மிடம் பேசிய போட்டியாளர்கள் சிலர், “நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாரத்தான் போட்டிக்கான எந்தவொரு பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தவில்லை. போட்டியில் பங்கேற்றவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள்கூட வழங்கவில்லை. போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கு ஏதேனும் காயம் அல்லது உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் முதல் உதவி வழங்குவதற்காக ஆம்புலன்ஸ் வசதிகள்கூட ஏற்படுத்தவில்லை. மேலும் 250 நபர்களுக்கு சைக்கிள் பரிசு வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். ஆனால், பின்னர் 20 நபர்களுக்கு மட்டும் சைக்கிள் வழங்கப்படும் எனக் கூறினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட போட்டியாளர்கள்

இதனால் ஆத்திரமடைந்த சிலர் சைக்கிள்களை எடுத்துச் செல்ல முயன்றனர். போட்டியில் பங்கேற்க கட்டிய பணத்தை திரும்பத் தருமாறு கூறி மறியலில் ஈடுபட்டனர். இதில் என்ன கொடுமை என்றால், மாவட்டக் காவல்துறையும் இணைந்து நடந்தும் போட்டி என்பதால், எல்லோரும் நம்பிக்கையோடு வந்தோம். அவர்கள் அனைத்தையும் சரிபார்த்து நடத்தியிருக்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்திய போலீஸாரிடம் இது குறித்து முறையிட்டோம். ஆனால் அவர்கள் எங்களை அப்புறப்படுத்துவதில்தான் குறியாக இருந்தனர்” என்றனர்.

from Tamilnadu News https://ift.tt/y6lUw2F