வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே இருக்கிறது ஜாப்ராப்பேட்டை கிராமம். இந்த கிராமத்தில் மொத்தம் 300 குடும்பங்களுக்கும் மேல் வசித்து வருகின்றனர். பல சமூக மக்கள் ஒன்றாக வாழும் இந்த கிராமத்தில் 12 குடும்பத்தினர் மண்பாண்ட தொழில் செய்து வருகிறார்கள். இவர்களில் 6 குடும்பத்தினர் மட்டும் ஒன்று சேர்ந்து ஊர் எதிர்ப்பையும் மீறி அங்காள பரமேஸ்வரி கோயில் ஒன்றை கட்டியிருக்கின்றனர். அந்த கோயில் கட்டி மயான கொள்ளை திருவிழாவை சுடுகாட்டில் நடத்தாமல் கோயில் அருகே நடத்தி வருவதால், ஊர்க்கார்கள் இந்த 6 குடும்பத்தினரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். இது தொடர்பாக விசாரிக்க அங்கு சென்றோம்.

இந்த விவகாரம் குறித்து குறிப்பிட்ட 6 குடும்பத்தினரும் நம்மிடம், “எங்களோட குல தெய்வம் அங்காள பரமேஸ்வரி. 30 வருஷத்துக்கும் மேலாக ஜாப்ராப்பேட்டை ஏரி பகுதியில சின்னதா ஒரு கல் நட்டு வழிப்பட்டு வந்தோம். 5 வருஷத்துக்கு முன்னால ஒருத்தர் மேல சாமி வந்து கோயில் கட்ட உத்தரவு போட்டதால, கல் நட்டு வழிப்பட்டு வந்த இடத்துலேயே கோயிலை கட்ட தொடங்கினோம். அந்தச் சமயத்துலேயே, ஊர் அனுமதி இல்லாம இங்க கோயில் கட்டக் கூடாதுனு ஊர் தர்மகர்த்தா எதிர்ப்பு தெரிவிச்சாரு.
அதனையும் மீறி 2 வருஷத்துக்கு முன்னால எங்க குல தெய்வ கோயிலை கட்டி முடிச்சு கும்பாபிஷேகமும் பண்ணிட்டோம். அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மாசி மாதம் `மயான கொள்ளை திருவிழா’ நடத்துறது வழக்கம். அப்படி 2022-ம் வருஷம் மயான கொள்ளை திருவிழாவை எங்க கோயில் பக்கத்திலேயே நடத்தினோம். இந்தத் திருவிழாவை சுடுகாடு இருக்கும் பகுதியில தான் நடத்தனும், கோயில் பக்கத்துலேயே நடத்தக்கூடாதுனு தடுத்தாங்க. அது எங்க குல தெய்வக் கோயில். நாங்க விரும்பிய இடத்துல திருவிழாவை நடத்திட்டு வர்றோம். அதில் அவர்களுக்கு என்ன பிரச்னை?

ஊர்ல இருக்கும் 300 குடும்பத்துக்கும் சேர்த்து பொதுவான கோயில்கள் 3 இருக்கு. அந்த கோயிலுக்கு திருவிழா செய்ய எல்லா சமூகத்தை சேர்ந்தவங்க கிட்டயும் ஊர் பிரிவு (வரி) வசூல் செய்வாங்க. ஊர் எதிர்ப்பை மீறி நாங்க கோயில் கட்டி மயான கொள்ளை திருவிழாவை நடத்தி வருவதால, ரெண்டு வருஷமா எங்க 6 குடும்பத்தினர் கிட்ட மட்டும் ஊர் பிரிவு (வரி) வாங்குறதில்லை. ஊர் வரி நாங்க கொடுக்காததால பொதுக் கோயிலுக்கு உள்ளே காலங்காலமா நாங்க செய்திட்டு வந்த அலங்கார பூஜைகளை செய்ய எங்களை அனுமதிக்கிறதில்லை.
எங்க குல தெய்வ கோயில் விழாவுக்கு ஊர் மேளக்காரர்களை மேளம் அடிக்க கூப்பிட்டதுக்கு “ஊர் தர்மகர்த்தா உங்க கோயிலுக்கு மேளம் அடிக்க போகக் கூடாதுனு உத்தரவு போட்டு இருக்கார் நாங்க வரமாட்டோம்னு சொல்லுறாங்க”. கோயிலுக்கு பந்தல், திருவிழாவுக்கு ரேடியோ, லைட் செட் போடுறவங்களும் அதே காரணத்தை சொல்லி, நாங்க கூப்பிட்டா இவங்களும் வர்றதில்லை

‘உங்க வீட்டுல நடக்குற நல்லது, கெட்டதுக்கு எல்லாம் இந்த ஊர்ல இடம் கிடையாது’ என்று ஊரை விட்டு ஒதுக்கி வச்சிருப்பதை மறைமுகமா சொல்றாங்க. இந்தச் சம்பவங்களுக்கு பின்னால் இருப்பவர், ஊர் தர்மகர்த்தா சந்திரசேகர். அவர் மேல காவல் நிலையத்துல புகார் கொடுத்தோம். என் மேலயே புகார் கொடுக்கிறீங்களா? நீங்க எப்படி ஊர்ல வாழறீங்க பார்ப்போம்னு மிரட்டினாரு. போதை ஆசாமிகளை தூண்டிவிட்டு நாங்க குடியிருக்கும் தெருவுல பெண்களையும், குழந்தைகளையும் கெட்ட வார்த்தையால திட்டி தீர்க்க வைக்கிறாரு.
எங்ககிட்ட நல்லா பேசி பழகுனவங்க கூட இப்ப எங்களை பார்த்தா கூட பேச மாட்டுறாங்க. இந்த மன உளைச்சல் காரணமா ராத்திரி நிம்மதியா எங்களால தூங்க முடியல. சில சமயம், இப்படி வாழ்றத விட செத்துல்லாம்னு தோனுது.போலீஸ் சமாதானம் பேசியும் இன்னைக்கு வரை தீர்வு கிடைக்கல. எல்லா சமூகத்தினரும் தானே எங்க கோயில்ல வந்து வழிப்படுறாங்க. மற்றவர்களை தூண்டிவிட்டு எங்களுக்கு எதிராக இந்த பிரச்னையை தருவதெல்லாம் ஊர் தர்மகர்த்தாவாக இருக்கக்கூடிய சந்திரசேகர் தான். அவர் பேச்சுக்கு ஊர் அடிமையாக இருக்கனும் நினைக்கிறாரு. அதுமட்டுமல்லாமல், இவர் நாங்க கட்டிய கோயிலை ஊருக்கு ஒப்படைக்க சொல்றாரு” என்றனர்.
குற்றச்சாட்டுக்குள்ளான ஊர் தர்மகர்த்தா சந்திரசேகரிடம் பேசினோம்.“இந்த பிரச்னையை போலீஸ் ஸ்டேஷன்லயே பேசி முடிச்சாச்சு. ஊர் முடிவுகளுக்கு எல்லோரும் ஒத்து போகனும். அதை விட்டுட்டு, அவர்களில் ஒருவரான எழிலரசன் என்பவர் 6 குடும்பத்தை சேர்ந்து வச்சுக்கிட்டு இல்லாத ஆட்டமெல்லாம் ஆடுறாரு. மயான கொள்ளை திருவிழாவை சுடுகாடு இருக்கும் பகுதியில தான் நடத்தனும். அதுக்கு பதிலா கோயில் பக்கத்துலேயே அந்தத் திருவிழாவை நடத்துனா எப்படி?. பக்கத்து ஊர் எல்லையான சேனூர் எனும் ஊரில் கோயில் கட்டிட்டு இந்த ஊர் மேளக்காரங்க, ரேடியோ, பந்தல், லைட் செட் போடுறவங்கள கூப்பிட்டா எப்படி வருவாங்க?. அந்த ஊருக்குனு ஊர் வேலைகளை செய்ய தனியா ஒரு குரூப் இருக்கு. அவங்கள கூப்பிட்டா வந்து செய்யப் போறாங்க.

இந்த வருஷம் அவங்க கிட்டயும் ஊர் பிரிவு (வரி) வாங்க பில் புக் போட்டு கொடுத்திருக்கோம். ஊரை விட்டு ஒதுக்கி வச்சுட்டதா சொல்றாங்களே. நாங்க என்ன கரென்ட் கட் பண்ணோமா, குடி தண்ணீர் நிறுத்தனோமா? நாங்க எந்த தடையும் போடல. இப்ப அவங்க போக்குல கோயிலை நடத்த விட்டுட்டோம்” என்றார்.
இந்தப் பிரச்னை குறித்து காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச் செல்வனிடம் பேசிய போது, “இந்த பிரச்னை தொடர்பாக இரண்டு தரப்பினரையும் அழைத்துப் பேசினோம்.

அதன்பிறகு ஆர்.டி.ஒ-வும் தாசில்தாரும் விசாரித்ததில் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக சொன்ன குற்றச்சாட்டு உண்மையில்லை என்று தெரியவந்தது. அந்த 6 குடும்பத்தினரும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக அவர்களாகவே நினைத்து கொண்டிருக்கின்றனர். நாங்கள் மேளக்காரர்களையும், ரேடியோ செட் போடுபவர்களையும் அழைத்து பேசியதில், `அவர்கள் வீட்டு நிகழ்வுகளுக்கு’ இன்று கூப்பிட்டால் கூட நாங்க போக தயார் என்று தான் சொன்னார்கள்.
ஆனால் அவர்கள் கட்டிய கோயில் இருக்கும் பகுதி ஊர் எல்லையில் இருப்பதால் அந்த ஊருக்கென்று இருப்பவர்கள் இந்த வேலைகளை செய்வது வழக்கமாம். இன்னும் இந்த பிரச்னை முழுமையாக தீர்வு அடையவில்லை. இது தொடர்பாக இன்னோரு முறை இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/ofwluvT
