“திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது, திராவிடத்துக்குள்தான் ஆன்மிகம் இருக்கிறது, காவி அணிந்து நல்லது செய்தால் அவர்களும் எங்களுக்கு நண்பர்களே” என அமைச்சர் எ.வ.வேலு பேசியிருக்கிறார்.

எ.வ.வேலு

மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.எல்.ஏ தளபதி, மேயர் இந்திராணி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பலர பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக மு.கருணாநிதி செயல்பட்டார். தனியார் பேருந்துகளை அரசுடைமையாக்கி, `எங்கள் பேருந்து’ என மக்கள் அழைக்க காரணமாக இருந்தவர்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக குடிநீர் நல வாரியம் அமைத்துத் தந்தவர், கோயில் கருவறைக்குள் நம்மவர்களை நுழைய அனுமதிக்கவில்லை என்பதால், அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்.

தி.மு.க பொதுக்கூட்டம்

ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி நமது ஆட்சி. நம்மை ஆன்மிகத்துக்கு எதிரானவர்களாகக் காண்பிக்க எதிர்க்கட்சியினர் முயல்கின்றனர். ஆனால், அது நடக்காது. திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. திராவிடத்துக்குள்தான் ஆன்மிகம் இருக்கிறது. நாங்கள் ஆன்மிகத்துக்கு எதிரானவர்கள் அல்ல. காவி அணிந்தவர்கள் எல்லோரும் எங்கள் விரோதிகளும் அல்ல. காவி அணிந்து நல்லது செய்தால், அவர்கள் எங்கள் நண்பர்கள்.

தென்மாவட்ட மக்கள் வழக்கு நடத்துவதற்கு அதிக பொருட்செலவு செய்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வரவேண்டிய தேவை இருந்தது. அதனால், மத்திய அரசிடம் போராடி மதுரைக்கு உயர் நீதிமன்றக் கிளையைக் கொண்டு வந்தது, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட பிச்சை.

எ.வ.வேலு

மதிய உணவு திட்டத்தை காமராஜர் தொடங்கி, எம்.ஜி.ஆர், கலைஞர் வரை அனைவரும் பல்வேறு விதங்களில் முன்னேற்றி இருந்தாலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார். இது பல்வேறு விதங்களில் குழந்தைகளுக்குப் பயன்படுகிறது. இப்படி மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து நடத்தும் ஆட்சிதான் கலைஞர் ஆட்சி.

மதுரைக்கு எய்ம்ஸ் வருகிறதோ இல்லையோ என்ற நிலையில், சென்னையில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையைக் கொண்டு வந்தவர் ஸ்டாலின்” என்றார்.

அண்ணாமலை

மதுரைக்கு உயர் நீதிமன்றக் கிளையை கொண்டு வந்தது கருணாநிதி போட்ட பிச்சை என்று அவர் பேசியது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அமைச்சரின் பேச்சுக்கு பலரும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை `பிச்சைப்போடுகிறோம்’ எனக் கூறி, மக்களைக் கொச்சைப்படுத்துவதா?” என எ.வ.வேலுவுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலு தன்னுடைய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். “உணர்ச்சிவசப்பட்டு தவறான வார்த்தையைப் வெளிப்படுத்திவிட்டேன்” என அவர் தெரிவித்திருக்கிறார்.

from Tamilnadu News https://ift.tt/fju9qPX