கோவை ஒண்டிப்புதூர் பகுதியிலுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் முத்துசாமி, பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை மாநகரில் 260 கோடி ரூபாய் மதிப்பில் 567 கி.மீ-க்குச் சாலைகள் அமைக்கப்படுகின்றன. அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்ய முகாந்திரம் இல்லை.

இந்தச் சோதனை திட்டமிட்டுச் செய்யப்படுகிறது. இதனால் யாரும் தொய்வடைந்துவிடப் போவதில்லை. அமைச்சர் பொன்முடி மேல் தவறு இருக்க முடியாது என எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இதிலிருந்து அவர் மிக விரைவில் மீண்டு வருவார். அமலாக்கத்துறை சோதனைகளால் பயத்தை ஏற்படுத்தி விட முடியாது. எங்களது கவனத்தைத் திருப்ப முடியாது.
டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்குத் திறப்போம் என ஒரு இடத்தில்கூட நாங்கள் எதுவும் சொல்லவில்லை. டாஸ்மாக் தொழிலாளர்கள் பிரச்னை தீர்ந்தால்தான் நிம்மதியாக வேலை செய்ய முடியும். தொழிலாளர்கள் பிரச்னைகளைத் தீர்க்க 18 தொழிற்சங்கங்களிடமிருந்து வாங்கிய மனுக்களை ஆய்வுசெய்து வருகிறோம். மது பாட்டில்களுக்குக் கூடுதலாகப் பணம் வசூலிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறோம்.

தொழிலாளிகள் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே முதல் இலக்கு. மது பாட்டில்களால் பல்வேறு பிரச்னைகள் வருவதால், `டெட்ரா பேக்’ கொண்டுவருவது குறித்து ஆய்வுசெய்கிறோம் என்றுதான் சொன்னோம். ஆலோசனைகளை அன்பாகச் சொன்னால் கேட்டுக்கொள்வோம். அதற்கு ஏன் திட்டுகிறார்கள்… நான் இரண்டு நிமிடங்கள் பேசியதை அரை நிமிடம் எடுத்தால் தவறாகத்தான் வரும்.
மது பாட்டில்கள் சேதமடைவது, கலப்படம் செய்ய வாய்ப்பிருக்கிறது எனச் சொல்லப்படுகிறது. அதனால் டெட்ரா பேக் கொண்டு வருவது குறித்து ஆய்வுசெய்து, கருத்துகள் கேட்டே கொண்டு வரப்படும். டெட்ரா பேக், 90 மி.லி மது குறித்து ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. அவை வந்தாலும் வரலாம், வராமலும் போகலாம். காலையில் குடிப்பவர்களை `குடிகாரர்கள்’ என்று சொல்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாது. மாலையில் அது வேறு விஷயம். காலையில் வேலைக்குச் செல்பவர்கள் கடுமையான வேலை செய்பவர்கள், தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள்.

இதைத் தவிர்க்க மாற்று வழி ஆலோசனைகளைச் சொல்லுங்கள். டாஸ்மாக் மூலம் பெரிய வருமானம் ஈட்ட வேண்டுமென்ற எண்ணம் இல்லை. மதுக்கடையில் காத்திருப்பதைத் தவிர்க்க 90 மி.லி மது கொண்டுவர ஆய்வுசெய்யப்படுகிறது. எந்தத் திட்டத்தையும் யாரையும் பாதிக்காத வகையில் செய்வோம்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/0KcN4AY
