கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு 2019-ல் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 88 ஏக்கர் பரப்பளவில் ஏறத்தாழ 400 கோடி ரூபாய் செலவில் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் பகுதி, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டு தீபாவளி, 2023-ம் பொங்கல் பண்டிகை, 2023-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு ஆகிய தருணங்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படலாம் என எதிர்பார்ப்புகள் கிளம்பின.
பின்னர் 2023-ம் ஆண்டு, ஜூன் மாதம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டும் என அறிவிக்கப்பட்ட நிலையிலும் இன்றுவரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்தபாடில்லை. `கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஏன் திறக்கப்படவில்லை, என்னதான் நடக்கிறது’ என சாமானியர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், பேருந்து நிலைய திறப்பு, காலதாமதமாகக் கடந்த அ.தி.மு.க ஆட்சியே காரணம் என்ற தொனியில் பதிலளித்திருக்கிறார் அமைச்சர் சேகர் பாபு.

2023 மே மாத இறுதியில் செய்தியாளர் சந்திப்பில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்துப் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “புதிதாகக் கட்டப்பட்டுவரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம், பேருந்துகளின் போக்குவரத்தைக் கருத்தில் கொள்ளாமல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
“இந்தப் பேருந்து நிலையம் மக்களுடைய அடிப்படைத் தேவைகள் எதையும் கணக்கிடாமல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மழைநீர் வடிகால் பணிகள் முறையாகச் செய்யப்படவில்லை. சிறுமழைக்கே பெருமளவிலான நீர் தேங்குகிறது… மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் தொடங்கும்” எனவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சேகர் பாபு கடந்த ஜூலை 12-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “கிளாம்பாக்கத்தில் சிறு மழைக்கே இடுப்பளவு மழைநீர் தேங்குவதால், மழைநீர் வடிகால்வாய் அமைக்க 13 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெறுகின்றன. கடந்த ஆட்சிக்காலத்தில் திட்டமிடாமல் பணிகளை மேற்கொண்டதால், ஒதுக்கீடு செய்ததைவிட கூடுதலாக 25 சதவிகித தொகை செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு விரைவாகப் பணிகளை முடிக்க முடியுமோ, முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வரப்படும்” என்றார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சசிரேகா, “தற்போதைய ஆட்சியாளர்களின் குளறுபடியை மறைக்கவும், அ.தி.மு.க-வுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவுமே இவ்வாறு பேசிவருகிறார்கள். அ.தி.மு.க ஆட்சியில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியை ஓராண்டிலேயே கட்டி முடித்தோம்.

இதுவே தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க ஆட்சி நடந்திருந்தால், எப்போதோ பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்திருக்கும். மக்கள் பணிகளில் கவனம் செலுத்தால் ஊழல் செய்வதில் கவனம் செய்துவிட்டு, அ.தி.மு.க-வை குறைகூறுவது என்பது தி.மு.க அரசின் திறனற்ற நிலையை உறுதிப்படுத்துகிறது” என்றார்.

நம்முடன் பேசிய சமூகச் செயற்பாட்டாளர்கள் சிலர், “ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க இப்படிச் சொல்லியிருந்தால் சரி, இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அ.தி.மு.க-வை குறைசொல்வது ஏற்கதக்கதல்ல. மழைநீர் வடிகால், காவல் நிலையக் கட்டட விவகாரங்களை ஆட்சிக்கு வந்தவுடன் ஆரம்பிக்காமல், 2023 ஜூனில்தான் ஆரம்பித்திருக்கின்றனர். இவ்வளவு காலதாமதமாக ஆரம்பித்துவிட்டு, கடந்த ஆட்சியைக் காரணம் சொல்வதை எப்படி ஏற்க முடியும். கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை 15 மாதங்களில் கட்டிமுடித்த தமிழ்நாடு அரசால், முதற்கட்ட பணிகளெல்லாம் முன்பே முடிந்த பேருந்து நிலையத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியே மிஞ்சுகிறது” என்றனர்.
தி.மு.க ஆட்சி காரணமா…. அ.தி.மு.க ஆட்சி காரணமா என்பதைவிட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்பதே மக்கள் முன்னிருக்கும் ஒரே கேள்வி!
from Tamilnadu News https://ift.tt/lc3jC4h
