தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த இரண்டாம் தேதி அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்தது. இரண்டாம் தேதி அஜித் பவார் தன்னுடைய ஆதரவாளர்களுடன் மகாராஷ்டிரா பா.ஜ.க கூட்டணி அரசில் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சரத் பவார், அமைச்சர்களாகப் பதவியேற்ற 9 பேர்மீதும் கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி, மகாராஷ்டிரா சபாநாயகரிடம் மனு கொடுத்திருக்கிறார். கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்க தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 36 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் அஜித் பவார் ஈடுபட்டிருக்கிறார். மற்றொரு பக்கம் சரத் பவாரை தங்களது அணி பக்கம் கொண்டு வரும் முயற்சியில் அஜித் பவார் ஈடுபட்டு வருகிறார்.

சரத் பவார்

நேற்று திடீரென அஜித் பவார் தன்னுடைய ஆதரவாளர்கள் சிலருடன் சென்று சரத் பவாரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது கட்சி உடைவதை தவிர்க்கும்படியும், ஒற்றுமையாக ஒரே அணியாக இருப்போம் என்றும் அஜித் பவார் அணியினர் சரத் பவாரிடம் தெரிவித்தனர். ஆனால் சரத் பவார் அவர்கள் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டார். வேறு எதையும் சொல்லவில்லை.

இந்த நிலையில், இன்று சட்டமன்றம் முடிந்தவுடன் அஜித் பவாரும், தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்களும் இரண்டாவது முறையாக சரத் பவாரைச் சந்தித்துப் பேசினர். இது குறித்து பிரபுல் பட்டேல், “சரத் பவார் எங்களுக்குப் பதில் சொல்லவில்லை. நாங்கள் சொல்வதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்” என்று தெரிவித்தார்.

சரத் பவாரிடம் கட்சி உடைவதைத் தவிர்க்கும்படி அதிருப்தி தலைவர்கள் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

அஜித் பவார்

ஆனால் அவர்கள் சென்ற பிறகு கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய சரத் பவார், தான் தொடர்ந்து முற்போக்கு அரசியலில் ஈடுபடப்போவதாகவும், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையே சரத் பவார் அணியினர் டெல்லியில் சட்டவல்லுநர்களுடன் இந்தப் பிரச்னை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கின்றனர். ஏற்கெனவே தேர்தல் கமிஷனுக்கும் சரத் பவார் கடிதம் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

from Tamilnadu News https://ift.tt/ISuz8Q0