1915-ம் ஆண்டு ஏப்ரல் 22, முதல் மே 25 வரை நடைபெற்றது இரண்டாம் Ypres போர். இந்தக் கட்டத்தில் முதலாம் Ypres போர் குறித்து இங்கே சுருக்கமாக நினைவுக்குக் கொண்டுவருவோம்.
மேற்கு பெல்ஜியத்தில் உள்ள நகரமான Ypres என்ற இடத்தில் நடந்ததால் இந்தப் போருக்கு இந்தப் பெயர். Ypres இருதரப்பினருக்கும் மிக முக்கியமான ஒரு நகரமாக இருந்தது. இரு முக்கியமான பிரான்ஸ் துறைமுகங்களுக்குக் கோட்டை போல் இந்த நகரம் அமைந்திருந்தது. இந்த துறைமுகங்கள் ஜெர்மனி வசம் சென்றுவிட்டால் நேச நாடுகளுக்கிடையே செல்லும் யுத்த தளவாடங்களுக்கான போக்குவரத்து நின்றுவிடும். பெல்ஜியத்தின் (பிரான்சை அடையக்கூடிய) பிற பகுதிகள் நிறைய மேடு பள்ளங்கள் கொண்டவை. Ypres சமதளத்தில் அமைந்த பகுதி. எனவே அதன் மூலமாக பிரான்சை அடைவதும் போரிடுவதும் ஜெர்மன் ராணுவத்துக்கு வசதி.

முதலாம் Ypres போரில் கடும் குளிர் காரணமாக, திறந்த வெளியில் போரிடுவது ராணுவ வீரர்களுக்கு ஒரு கட்டத்தில் அசாத்தியமானதால் இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டிய கட்டாயம் உண்டானது. போர் முறையைப் புரட்டிப் போட்டது இரண்டாம் Ypres போர்.
Ypres பகுதியில் தங்கியிருந்த பிரெஞ்சு படையினர் எதிரிகளிடமிருந்து அதாவது ஜெர்மன் ராணுவத்திடமிருந்து தாக்குதல்களை எதிர்பார்த்தார்கள். குண்டுகள் வீசப்படலாம். பீரங்கி இயக்கப்படலாம். துப்பாக்கிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க முயன்றார்கள். எந்த வகைத் தாக்குதலாக இருந்தாலும் தோண்டப்பட்ட பெரிய பள்ளங்களுக்குள் இருப்பது கணிசமான பாதுகாப்பைத் தரும் என்று கருதி இருந்தார்கள். அத்தனைக்கும் முடிவு கட்டியது ஜெர்மன் ராணுவம் மேற்கொண்ட ஒரு செயல்.
1915 ஏப்ரல் 22-ம் தேதி, காற்று அமைதியாக இருந்தது. இரு தரப்பினருக்கும் வெற்றி தோல்வி இல்லாத ஒரு நிலை உண்டாகி இருந்தது. அப்போதுதான் அந்த விபரீதம் அரங்கேறியது. ஜெர்மன் ராணுவத்தினர் தங்கள் புதிய ஆயுதத்தை ஏவினர். மேகம் போன்ற ஏதோ தங்களை நோக்கி வருவதைக் கண்ட பிரெஞ்சு ராணுவத்தினர் திகைத்தனர். அந்த மேகம் அவர்களைத் தாக்கிய போது அவர்களிடமிருந்து கதறல் ஒலி வெளிப்பட்டது.

அது நச்சு காற்று மேகம். பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் வெளிப்பட்ட குளோரின் வாயு. அழுத்தி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்களில் இருந்து அது எதிரணியை நோக்கிச் செலுத்தப்பட்டது. கொஞ்சநஞ்சமல்ல, 168 டன் விஷவாயு. இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை பிரெஞ்சு ராணுவத்தினர். குளோரின் வாயு காற்றை விட கனமானது. எனவே அது மேல் எழும்பாமல் தரையில் இயங்கிக்கொண்டிருந்த படையினரைப் பாதித்தது. பள்ளங்களில் பதுங்கி இருந்த ராணுவத்தினரை இது சூழ்ந்து கொண்டது. அவர்களின் சுவாச மண்டலத்தைப் பாதிக்கத் தொடங்கியது. கடுமையான பாதிப்பு. அவர்களுக்கு மூச்சு விடுவதில் மிகவும் சிரமம் உண்டானது. கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் இருந்து எப்படித் தப்புவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. பலரும் இறந்தார்கள்.
போர்முனையில் நச்சுக்காற்றைப் பயன்படுத்துவது என்பது அதுவரை கேள்விப்பட்டிருக்காத ஒன்று. உலக நாடுகள் அதிர்ந்தன. போர் நெறிமுறைகளுக்கு மிகவும் எதிரானது இது என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
இந்த விபரீத யோசனைக்கு வித்திட்டது யார்?
பிரபல ஜெர்மன் விஞ்ஞானியான வால்தெர் நெர்னஸ்ட் (Walther Nernest) என்பவர், வெட்டப்பட்ட பள்ளங்களுக்குள் எதிரணி ராணுவத்தினர் மறைந்து கொண்டு செயல்பட்டதால்தான் ஜெர்மன் ராணுவத்தால் நினைத்த இலக்கை அடைய முடியவில்லை என்று கருதினார். கண்ணீர் வாயுவை அந்த பள்ளங்களுக்குள் பீய்ச்சி அடித்தால் வேறு வழி இல்லாமல் அவர்கள் வெளியே வருவார்கள். அப்போது தாக்குதல் நடத்துவது எளிது என்று ஜெர்மன் ராணுவ அதிகாரிகளுக்குப் பரிந்துரைத்தார். அதைப் பரிசோதித்துப் பார்க்கலாம் என்று தங்கள் தரப்பில் வெட்டப்பட்ட ஒரு குழியில் தங்கள் ராணுவத்தினரையே நிற்க வைத்து முயற்சி செய்தபோது, ஃப்ரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) என்ற மற்றொரு விஞ்ஞானிக்கு வேறொரு யோசனை தோன்றியது. குளோரின் வாயுவைச் செலுத்தினால் எதிரணியின் பாதிப்பு எக்கச்சக்கமாக இருக்குமே! அதுதான் நடைமுறைப்படுத்தப்பட்டது.

விஷவாயுவைச் சுவாசித்த பிரெஞ்சு வீரர்களின் நுரையீரல்கள் எரிந்து போயின. மிகக் கொடூரமான முறையில் அவர்கள் மரணம் அடைந்தனர். என்றாலும் இந்த விதத்தில் ஜெர்மனி அடைந்த ‘ வெற்றி’ அதிக நாள்களுக்கு நீடிக்கவில்லை. முக்கிய காரணம் காற்றின் திசையைத் துல்லியமாகக் கணிக்கமுடியவில்லை. இதனால் திடீரென்று காற்று எதிர்த் திசைக்குத் திரும்பி ஸேம் சைடு கோல் போட்டது. அதாவது ஜெர்மனி வீரர்களையே அது ஓரளவு பாதிக்கத் தொடங்கியது.
முதல் நாள் விஷவாயுவை எதிர்கொள்ள முடியாமல் நேச நாடுகள் அணி வெலவெலத்துப் போனது உண்மைதான். என்றாலும் உடனடியாக அதை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நல்ல வேலையாக குளோரின் வாயு வெகு தொலைவில் வந்துகொண்டிருக்கும்போதே அதன் நாற்றம் அதைக் காட்டிக்கொடுத்துவிடும். எனவே அதற்குத் தகுந்த மாதிரி பாதுகாப்புகளைச் செய்துகொள்ள வாய்ப்பு உண்டு.
என்ன வகைப் பாதுகாப்பு?
பருத்தித் துணிகளைச் சிறுநீரில் நனைத்து வைத்திருந்தார்கள். குளோரின் வாயுவை அவை தன்புறம் ஈர்த்துக் கொண்டு ஆபத்தை ஓரளவு சரி செய்தது. இதைவிட முக்கியமாக அவர்கள் பாதுகாப்புக்கு உருவாக்கிய கேடயம் முகக்கவசங்கள்.
மார்புக் கவசங்கள் பாதுகாப்பு அளிக்கும்தான். அவற்றின் எடையையும் சேர்த்துச் சுமந்துகொண்டு போர்முனையில் ஓடுவதும் தாக்குதல் நடத்துவதும் சிரமம்தான். ஆனால் முகக் கவசம் என்பது அதைவிட மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதுவும் காற்று நுழைய முடியாத முகக் கவசங்களை முகத்தின்மீது பொருத்திக்கொண்டு போரிடுவது பெரும் வேதனை. எதிர்த்தரப்பிலிருந்து விஷவாயு வரும்போது முகக்கவசத்தை அணிவது, காற்றின் வீரியம் நீங்கிய பிறகு அந்த முகக்கவசத்தை கழற்றி விட்டுக் கொண்டு தாக்குதலை நடத்துவது என்று மாறுபட்ட போர் நடைமுறைக்கு அவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டியிருந்தது.

எப்படியோ இரண்டாம் Ypres போரில் ஜெர்மனி ஜெயித்தது. முப்பது ஆயிரத்துக்கும் அதிகமான ஜெர்மானிய வீரர்கள் இறந்தனர். அதைப் போல இருமடங்கு எண்ணிக்கையில் நேச அணி வீரர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை இருந்தது. விஷவாயுவால் தாக்கப்பட்டவர்களுக்குத் தாற்காலிக பார்வையிழப்பிலிருந்து மரணம் வரை பல விபரீதங்கள் ஏற்பட்டன. இந்த மனிதாபிமானமற்ற உத்தி பின்னரும் பல போர்களில் பயன்படுத்தப்பட்டது.
இந்தப் போக்கைத் தடுக்க பின்னர் 1925ல் ஜெனிவா போர் நடைமுறை என்ற ஒன்று உருவானது. அதில் ரசாயன மற்றும் உயிரிகளை மையமாகக்கொண்டு ஆயுதங்கள் போர்களில் பயன்படுத்தக் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டது.
– போர் மூளும்…
from Tamilnadu News https://ift.tt/NPL8C4X
