கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆளூர் பேரூராட்சி, இப்போது நாகர்கோவில் மாநகராட்சியில் இணைக்கப்பட்டுவிட்டது. ஆளூர் பேரூராட்சியில் 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை தலைவியாக இருந்தவர் லதா சந்திரன். ஆளூர் பேரூராட்சி அ.தி.மு.க செயலாளராக இருந்த இவர், தற்போது நாகர்கோவில் மாநகராட்சி வட்டச் செயலாளராக இருக்கிறார். லதா சந்திரன் தேர்தலில் போட்டியிடும்போது தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில், கன்னியாகுமரி மண்பாண்ட தொழிலாளர் சங்கத் தலைவர் சுகுமாரன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி லதா சந்திரனின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பல மணிநேரம் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனை அந்தப் பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
இது பற்றி நம்மிடம் பேசிய சுகுமாரன், “லதா சந்திரன் 2001-ம் ஆண்டு ஆளூர் பேரூராட்சியில் 12-வது வார்டு உறுப்பினராகப் போட்டியிட்டபோது, அவரது பெயரில் அசையா சொத்துகள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். 2006-ம் ஆண்டு கவுன்சிலராகப் போட்டியிடும்போது, ஒரு ராயல் என்ஃபீல்ட் பைக், 15 பவுன் நகைகள் இருப்பதாக அஃபிடவிட்டில் குறிப்பிட்டிருக்கிறார்.

2011-ம் ஆண்டு ஆளூர் பேரூராட்சித் தலைவராகப் போட்டியிடும்போது தாக்கல்செய்த அஃபிடவிட்டில் 10,000 ரூபாய் ரொக்கப்பணம், இந்தியன் வங்கியில் 11 லட்சம் ரூபாய் டெபாசிட், 14 லட்சம் மதிப்புள்ள 70 பவுன் நகைகள், 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 65 சென்ட் மனை ஆகியவை இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று ஐந்து ஆண்டுகள் பேரூராட்சித் தலைவராக இருந்தபிறகு, 2016-ம் ஆண்டில் கவுன்சிலராகப் போட்டியிட்டபோது அவரது சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்திருந்தது. அவரது அஃபிடவிட்டில் 5,000 ரூபாய் ரொக்கம், 120 பவுன் நகைகள், 95 சென்ட் மனை, தனியாக 5.5 சென்ட் குடியிருப்பு மனை, 2,500 சதுர அடியில் வீடு இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். வீட்டின் மதிப்பு 45 லட்சம் ரூபாய் என்றும், 95 சென்ட் நிலத்தின் மதிப்பு 40 லட்சம் ரூபாய் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் கணக்கில் காட்டிய சொத்துகளே இவ்வளவு என்றால், கணக்கில் காட்டப்படாமல் என்னவெல்லாம் இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இவ்வளவு சொத்துகள் இருந்தும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பதாக ஆவணமும் சமர்ப்பித்திருக்கிறார் லதா சந்திரன். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர்மீது விஜிலென்ஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என 2019-ம் ஆண்டே மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தேன். அந்த ஆண்டே அதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க விஜிலென்ஸுக்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

கடந்த ஐந்து ஆண்டுகள் வீரநாராயணசேரி கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்த லதா சந்திரனின் பதவிக்காலம் இரண்டு மாதங்களுக்கு முன்பு முடிந்துவிட்டது. கூட்டுறவு சங்கத் தலைவியாக இருந்தபோது அவர் பல முறைகேடுகளைச் செய்ததாக அந்தப் பகுதி மக்கள் புகார் வாசிக்கின்றனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய சிலர், “பசு மாடு வளர்ப்பவர்களுக்குக் கொடுக்கும் கடனை, பசு மாடு இல்லாதவர்களுக்கு லதா சந்திரன் வழங்கியிருக்கிறார். அந்த விவகாரம் அதிகாரிகள் விசாரணை நடத்தும் அளவுக்குச் சென்றது. கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளுக்கு வழங்கும் உரங்களை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து கமிஷன் வாங்குவது அவரது வாடிக்கை. வேண்டப்பட்ட பலருக்கும் கூட்டுறவு சங்கம் மூலம் கடன் கொடுத்து 20 சதவிகிதம் பணத்தை லஞ்சமாக வாங்கி முறைகேடு செய்திருக்கிறார்” என்றனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து லதா சந்திரனிடம் விளக்கம்கேட்டுப் பேசினோம். “லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டின்போது இரண்டு பாஸ்புக் ஜெராக்ஸுகள், லோன் பற்றிய சில ஜெராக்ஸுகளை நான் கொடுத்தேன். வேறு எந்த ஆவணமும் எடுக்கவில்லை. என் பழைய வீட்டை லோன் எடுப்பதற்காக தங்கைக்கு எழுதிக்கொடுத்திருந்தேன். அதனால்தான் கவுன்சிலராகப் போட்டியிடும்போது எனக்கு சொத்து இல்லை. அதன் பின்னர் தங்கை எனக்கு வீட்டை இஸ்டதானமாக எழுதித்தந்தார். என் நகைகளை விற்றும், மூத்த சகோதரி மற்றும் சிலரிடம் கடன் வாங்கியும் பழைய வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்டினேன். நான் வட்டிக் கடனில் மூழ்கிக்கொண்டிருக்கிறேன். பஞ்சாயத்துத் தேர்தலில் நின்ற பிறகு இதுவரை நான் எந்த சொத்தும் வாங்கவில்லை. சுகுமாரனுக்கும் எனக்கும் ஊர்ப் பிரச்னையில் வழக்கு உண்டு. அதனால் அவர் என்மீது பாய்கிறார். கூட்டுறவில் எல்லாமே ஆன்லைன் ஆகிவிட்டது. அதில் எப்படி ஊழல் செய்யமுடியும். பசு மாடு லோனில் நடந்தது அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பிரச்னை. அதில் என் தவறு எதுவும் கிடையாது. தமிழ்நாட்டிலேயே ஜெயலலிதா நியமித்த ஒரே பேரூராட்சித் தலைவி நான். என் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதைச் செய்கிறார்கள். வறுமைக்கோட்டுக்குக் கீழ் நான் இருப்பதாக சொல்வது தவறு. லஞ்ச ஒழிப்புத்துறையைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். நான் கோர்ட்டுக்கு பதில் சொல்லிக்கொள்வேன். ஊழல் செய்தால் நான் ஜெயிலுக்குப் போவேன். ஆனால், என் வீட்டைச் சுற்றி உள்ளவர்கள் எதற்காக ஆளாய் பறக்கிறார்கள் எனத் தெரியவில்லை” என்றார் ஆவேசமாக.

லதா சந்திரன் வீட்டில் ரெய்டு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி ஹெக்டர் தர்மராஜிடம் பேசினோம். “சுகுமார் என்பவர் தொடுத்த வழக்கின் அடிப்படையில் இதுவரை முதல் நிலை விசாரணை நடைபெற்று வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தகாக எழுந்த புகாரில் உண்மை இருப்பதன் அடிப்படையில், 13-ம் தேதி வழக்கு பதிவுசெய்யப்பட்டது. 14-ம் தேதி நடந்த ரெய்டில் அவரது வீட்டிலிருந்து செலவு சம்பந்தப்பட்ட ரசீதுகள் உள்ளிட்ட 20 ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறோம். இனி இது சம்பந்தமான சாட்சிகளை விசாரித்துவிட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கையைத் தொடருவோம்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/vgnotm9
