`காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு தமிழக அரசும் துணை போகிறது’ என்பதனைக் கண்டித்து, திருச்சி மாவட்ட பாஜக, தலைமை அலுவலகத்தில் பாஜக-வின் மூத்த தலைவரும், முன்னாள் தேசியச் செயலாளருமான ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “காவிரி நதிநீர் பங்கீடு பிரச்னையில் தி.மு.க., 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகிறது. மேக்கேதாட்டூ அணையை கட்டியே தீருவோம் எனக் கூறிவரும் கர்நாடக காங்கிரஸாரை, ஒரு சம்பிரதாயத்திற்குக் கூட ஸ்டாலின் கண்டிக்கவில்லை. மாறாக அங்கு போய் சித்தராமையாவுக்கும், சிவக்குமாருக்கும் பாதபூஜை செய்து கொண்டிருக்கிறார்.

உப்பு தின்றால் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும். அந்தவகையில், கடந்த காலங்களில் போடப்பட்ட ஊழல் வழக்குகளின் அடிப்படையில் தான் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்றபடி இது பழிவாங்கும் நடவடிக்கை என வேண்டுமென்றே பொய்களைப் பரப்புகின்றனர். பா.ஜ.க-வுக்கும் நடக்கக்கூடிய அமலாக்கத்துறை ரெய்டுகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. செந்தில் பாலாஜி மீது 2014-ல் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஸ்டாலின் கூட கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தபோது, ‘தி.மு.க., ஆட்சிக்கு வந்த மறுநாளே செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார்’ என சபதம் செய்தார்.
ஸ்டாலின் செய்த அந்த சபதத்தை இப்போது அமலாக்கத்துறை நிறைவேற்றி வைத்திருக்கிறது. கரூரில் செந்தில் பாலாஜிக்கு சம்பந்தமான இடங்களில் பிடிபட்டது மட்டும் 19 ஆயிரம் கோடி என தகவல் சொல்கிறார்கள். அது உண்மையா என்பதனை நீங்கள் அமலாக்கத்துறையிடம் தான் கேட்க வேண்டும். அதேபோல பல்லாயிரக்கணக்கான கோடிக்கு கிராவல் மண்ணை எடுத்து விற்ற குற்றவாளி பொன்முடி. அதுசம்பந்தமாக கடந்த காலங்களில் பதியப்பட்ட வழக்கைத் தான் இன்றைக்கு அமலாக்கத்துறை கையில் எடுத்திருக்கிறது. ஆடி 1-ம் தேதி ED-ன் (அமலாக்கத்துறை) ஆடி ஸ்பெஷல் ஆஃபர் தான் பொன்முடி மீதான இந்த நடவடிக்கை. இந்தச் சலுகை இன்னும் தொடரும். அடுத்ததாக கே.என்.நேருவுக்கும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் அமலாக்கத்துறை ரெய்டு வரும்” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “இன்னைக்கு தக்காளி விலை அதிகமாக இருக்கிறது. ஆனால், அடுத்த மூன்றே மாதத்தில் பறிக்கின்ற கூலிக்கு கூட தக்காளிக்கு விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தக்காளிகளை கொட்டுவார்கள். தற்போது வட மாநிலங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், தக்காளியின் விலை அதிகமாகியிருக்கிறது. உதாரணத்திற்கு, 40 ரூபாய்க்குக் கீழே தக்காளி விலை குறையும்போது, அதே 40 ரூபாய்க்கு எல்லா விவசாயிகளிடமிருந்தும் அரசாங்கமே தக்காளியை கொள்முதல் செய்ய வேண்டும். ஏனென்றால் விவசாயிகள் கஷ்டப்படும் போது ஒருவரும் பேசுவதில்லை. மக்கள் நினைத்தாலே தக்காளி விலையைக் குறைக்கலாம். 4-5 நாளைக்கு மக்கள் தக்காளியை வாங்காமல் இருந்தாலே தக்காளியின் விலை தானாகவே குறைந்துவிடும். மற்றபடி திட்டமிட்டே இதை பிரச்னையாக்குகிறார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் இவரென்று சொல்லாமல் நிற்பதென்பது ஒரு கூட்டணிக்கு நிச்சயமாக எந்த பலனையும் கொடுக்காது” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/UY6krTh
