கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேசிய ஜனநாயகக் கூட்டணி தன்னுடைய கூட்டத்தைக் கூட்டியிருக்கிறது. அதில் இடம்பெற்றிருக்கிற அனைத்து கட்சிகளும் கூடி, எங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறோம். எதிர்க்கட்சிகள் கூட்டம் போட்டதற்காக நாங்கள் கூட்டம் போடவில்லை. ஏற்கெனவே திட்டமிடப்பட்டு தேதி அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட கூட்டம் இது.

அ.தி.மு.க-வில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஏற்கெனவே இருக்கும் உறுப்பினர்கள் புதுப்பித்தல் பணி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் வரை 1.72 கோடி உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள். எங்களுடைய இலக்கு 2 கோடி உறுப்பினர்கள். நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் ஆங்காங்கே தொடங்கியிருக்கின்றன.
தமிழகத்தில் அ.தி.மு.க-தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை” என்றவர்… மதுபானம் விலை உயர்த்தப்பட்டது குறித்து கேள்விக்கு, “எனக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது. மதுபான விலை உயர்வு குறித்து சம்பந்தபட்ட அமைச்சரிடம் கேட்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தி.மு.க அரசு மட்டும்தான் ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு. ஸ்டாலின் அதைப் பற்றி பேசுவதற்குத் தகுதி கிடையாது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஆலடி அருணா, என்.கே.கே.பி ராஜா போன்றோர் அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

அ.தி.மு.க-வில் அமைச்சர் ஒருவர்மீது புகார் வந்தபோது, நீக்கப்பட்டார். ஆனால் இன்றைக்கு செந்தில் பாலாஜி, ஸ்டாலினை நிறைய வெயிட்டாக கவனித்திருக்கிறார். அவர் ஏதாவது வாயைத் திறந்து சொல்லிவிட்டால்… என பயந்துபோய், திரண்டு போய் அவரை இரவோடு இரவாகச் சந்திக்கிறனர். ஆறுதல் சொல்வதற்காகப் போகவில்லை. ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் போயிருக்கின்றனர். இதுதான் உண்மை.
யார் தவறு செய்தார்களோ அவர்கள்மீதுதான் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உயரதிகாரிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையில், சாதாரண மக்களின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். டி.ஐ.ஜி தற்கொலை விவகாரத்தில் மருத்துவருக்கு சம்மன் அனுப்பாதது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும். பஞ்சாலைகள், கார்மென்ட்ஸ் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி கோவை.

ஜவுளி தொழில் அதிகமாக நடக்கக்கூடிய இந்தப் பகுதி, இன்று நலியும் சூழலில் இருக்கிறது. சிறு குறு பஞ்சாலைகள் நடத்துபவர்கள் தமிழக அரசிடம் வைத்திருக்கும் கோரிக்கைகளை, நிறைவேற்றிட வேண்டும். விலைவாசி உயர்வு உள்ளிட்டப் பிரச்னைகளை முன்வைத்து நாளை அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/95oBAwN
