ஆன்லைன் தடைச் சட்ட மசோதா விவகாரத்தில், தமிழ்நாடு அரசு பலமுறை ஆளுநரின் ஒப்புதல் வேண்டி பலமுறை அவருக்கு தடைச் சட்ட மசோதாவை அனுப்பிவைத்தது. ஆனால், ஆளுநர் அவற்றையெல்லாம் நிராகரித்த வண்ணமாகவே இருந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 10-ம் தேதி அமைச்சரவையில் ஆளுநருக்கு எதிராகத் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்ட அதே நாளில், சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதையடுத்து, அந்தச் சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், இதை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதிகள் கங்கபுர்வாலா, ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “ஆன்லைன் விளையாட்டுகளைத் தடைசெய்து சட்டமியற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை” என வாதிட்டார். இந்த நிலையில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசின் வாதத்தில் `தமிழ்நாடு அரசுக்கு சட்டமியற்ற அதிகாரமில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்பு ஆட்சியிலிருந்த அ.தி.மு.க அரசு, இந்தச் சட்டத்தை இயற்றியது. அது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்துக்குச் சென்றபோது, `இது மூன்று சட்டங்களை உள்வாங்கி அமைக்கப்பட்ட திருத்தச் சட்டம். எனவே தமிழ்நாடு அரசு நீதிமன்றம் கூறிய காரணங்களையெல்லாம் பரிசீலித்து, புதிய சட்டம் கொண்டுவருவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை’ என நீதிமன்றம் கூறியது.
மத்திய அரசு இந்தத் தீர்ப்பின்மீது எந்த மேல்முறையீடும் செய்யவில்லை. ஆனால், தமிழ்நாடு அரசுக்கு சட்டமியற்ற அதிகாரமில்லை என்றும், மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக சட்டமியற்றியிருப்பதாகவும் மட்டும் மத்திய அரசின் வழக்கறிஞர் வாதிடுகிறார். உண்மையில், மத்திய அரசு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் சில விதிமுறைகளை அறிமுகப்படுத்தியதே தவிர… சட்டமியற்றியதாக எனக்குத் தெரியவில்லை.

ஆன்லைன் சூதாட்டத்தால் ஏறக்குறைய 40-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருக்கிறார்கள். பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டன. இதையெல்லாம் கருத்தில்கொள்ளாமல், மத்திய அரசு கொண்டுவந்த விதிமுறைகள் அனைத்தும் மத்திய அரசுக்கு வருவாய் வரும் வகையிலும், ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலும்தான் விதிக்கப்பட்டிருக்கின்றன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசு இயற்றிய இந்தச் சட்டமும், மாநில அரசுப் பட்டியலில்தான் இயற்றப்பட்டது. விளையாட்டில் ஆன்லைன் – ஆஃப்லைன் இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆஃப்லைனில் இருவரின் திறமையை முன்வைத்து வெற்றி, தோல்வி தீர்மாணிக்கப்படுகிறது. ஆனால், ஆன்லைனில் புரோகிராமர் என ஒருவர், விளையாடும் இருவருக்கு மத்தியில் இருப்பார். அவர் நினைக்கும்படிதான் விளையாட்டு நகரும் என்ற சூழலை மறுக்க முடியாது.

ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் வரும் பாவமான ஜி.எஸ்.டி வருமானம் எங்களுக்குத் தேவையில்லை. உலக சுகாதார மையம் ஆன்லைன் விளையாட்டைக் கொடிய நோயாக அறிவித்திருக்கிறது. இவற்றை உணர்ந்து மத்திய அரசு உரிய திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/CysQxrl
