அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயர்வைக் கண்டித்து, அ.தி.மு.க சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் காய்கறி மாலை அணிந்து கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய வேலுமணி, “அம்மா, எடப்பாடியார் ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விலையைக் குறைத்து, மக்களுக்குக் கொடுத்திருக்கிறோம். இப்போது சோப்பு முதல் சீப்பு வரை எல்லா பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது.

எஸ்.பி.வேலுமணி

அதைப் பற்றியெல்லாம் முதல்வருக்குக் கவலையில்லை. பெங்களூருவுக்குச் சென்று இந்தியாவையே மாற்றியமைக்கிறோம் என்று சொல்கிறார். அங்கு சென்று காவிரி நதி நீர்ப் பிரச்னை குறித்துப் பேசினாரா… தி.மு.க-வில் இருக்கும் அனைவரும் அடிமைகள். அரசு கஜானாவுக்குச் செல்ல வேண்டியதை வைத்து, இவர்களின் கஜானாவை நிரப்பிக் கொள்கிறார்கள்.

எடப்பாடியார் எப்போது முதல்வராவார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் கேட்கிறது. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக சிறப்பாகச் செயல்படுவது எடப்பாடியார் மட்டும்தான். இந்த 2 ஆண்டுகளில் மற்றவர்கள் எத்தனை ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வாக்கு கேட்போம்” என்றார்.

வேலுமணி

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, “அ.தி.மு.க ஆட்சியில் கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக முதற்கட்டமாக நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது மெட்ரோ ரயில் இரண்டு வழிகளில் மட்டும் விடப்படும் எனக் கூறுகின்றனர். அனைத்து வழிகளிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். கோவை டி.ஐ.ஜி தற்கொலை செய்துகொண்ட வழக்கை, சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இந்த ஆட்சியில் மக்களுக்காக அதிகமான ஆர்ப்பாட்டங்கள் நடத்திய கட்சி அ.தி.மு.க. சட்டமன்றத்தில் எடப்பாடியார் கேள்விகளுக்கு தி.மு.க-வினரால் பதில் சொல்ல முடியவில்லை. தமிழகத்தில் சில கட்சிகள் வளர்வதற்காக அதன் தலைவராக இருப்பவர்கள் `நாங்கள்தான் எதிர்க்கட்சி’ என்று சொல்வார்கள். தி.மு.க-வுடன் கூட்டணியிலுள்ள கட்சிகள் ஏற்கெனவே அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இருந்தபோது, அரசுக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தியவர்கள்.

ஆர்ப்பாட்டம்

ஆனால் தற்போது தி.மு.க சொன்னால்தான் அறிக்கையே கொடுக்கிறார்கள். எங்களைப் பார்த்து அடிமை என்கிறார்கள். இப்போது யார் அடிமை என்பதை அவர்களிடம் கேளுங்கள்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/cX24Kb7