மகளிருக்கு மாதந்தோறும் உரிமைத்தொகையாக 1000 ரூபாய் வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட’த்தை அறிவித்ததோடு, பயனாளர்களுக்கான தகுதி வரையறைகளையும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதில் பல குழப்பங்கள்,சந்தேகங்கள் இருக்கும் நிலையில் யாரெல்லாம் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற இயலும் என்பதை விரிவாகக் காண்போம்.

2023-ம் ஆண்டின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி தரவரிசைப்படுத்தப்பட்ட 146 நாடுகளில், இந்தியா 127-வது இடத்தைப் பெற்றுள்ளது. வாங்கும் திறன் அடிப்படையில் பெண்களின் உலகளாவிய சராசரி ஆண்டு வருமானம் சுமார் 11,000 டாலர் என்றும், அதே வேளையில் ஆண்களின் சராசரி ஆண்டு வருமானம் 21,000 டாலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஆண்களின் வருமானத்தைவிட பெண்களின் வருமானம் ஏறக்குறைய சரிபாதி அளவிற்குதான் இருக்கிறது. ஆண்களுக்கு இணையாக பெண்கள் உழைக்கிறார்கள்… ஆனால், அவர்களின் உழைப்பு குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. பெண்களின் உழைப்பிற்கான பொருளாதார மதிப்பை அங்கீகரிக்கவும், விவசாயம், வீட்டு வேலை போன்ற குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபட்டுள்ள ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கிடவும் இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த திட்டத்திற்காக 2023 மற்றும் 2024 -ம் ஆண்டிற்கு 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தகுதி என்ன?
2002-ம் ஆண்டு செப்டம்பர் 15 -ம் தேதிக்கு முன்னர் பிறந்த குடும்பத்தலைவிகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களின் குடும்ப அட்டை எந்த பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதோ, அந்தப் பகுதியில் நடைபெறவிருக்கும் விண்ணப்ப பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
குடும்ப அட்டையில் பெயர் இடம்பெற்றிருக்கும் அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்படுவார்கள். அந்தக் குடும்பத்தில் உள்ள தலைவி இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

குடும்ப அட்டையில் குடும்பத் தலைவராக அந்த குடும்பத்தின் பெண் இருந்தால் விண்ணப்பிக்கலாம்.
குடும்ப அட்டையில் ஆண் குடும்பத்தலைவர் என குறிப்பிடப்பட்டு இருந்தால், அந்த குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவராக கருதப்படுவார்.
ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.
திருமணம் ஆகாத பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத்தலைவிகளாக கருதப்படுவார்கள். அவர்களும் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
பொருளாதார தகுதிகள் என்னென்ன ?
2.5 லட்சத்திற்கு கீழ் ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்கள்..
ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் உபயோகிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.

யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது ?
2. 5 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்பவர்கள்.
2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் தொழில் வரி செலுத்துவோர்.
மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள்.
பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், வங்கிகளில் பணிபுரிபவர்கள், தமிழ்நாடு வாரிய பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பின் பணியாளர்கள், கூட்டுறவு அமைப்பின் பணியாளர்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெற முடியாது.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் தவிர), அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பயன்பெற முடியாது.
சொந்த பயன்பாட்டிற்கு கார், ஜீப், லாரி, டிராக்டர் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பயன்பெற இயலாது.
ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல், விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் பயன்பெற இயலாது.
மற்றும் ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து பிற ஓய்வூதியம் பெரும் பெண்கள் இத்திட்டத்தில் பயன் பெற இயலாது.
விதிவிலக்கு !
தங்கள் குடும்பத்தில், மாற்றுத்திறனாளி நலத் துறையால் வழங்கப்படும் ‘கடும் உடல் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை’யைப் பெற்றுக்கொண்டிருக்கும் உறுப்பினரை கொண்டிருக்கும் குடும்பத்தின் தலைவி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் செய்வது எப்படி?
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வழங்கும் கால அட்டவணையை அந்தந்த மாவட்ட ஆட்சியர் வெளியிடுவார்கள். பல்வேறு மாவட்டங்களில் விண்ணப்பம் வழங்கும் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. நியாயவிலைக் கடைகள் மூலமும் மக்களுக்கு தெரிவிக்கப்படும். அதன்படி சென்னையில் இன்றிலிருந்து (20-07-23) ஆகஸ்ட் 16-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படவிருக்கிறது.
விண்ணப்பங்களை உங்கள் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையின் பணியாளர்களே உங்கள் வீட்டில் வந்து வழங்குவார்கள். அந்த விண்ணப்பத்தில் உங்கள் குடும்ப அட்டையின் எண் குறிப்பிடப்பட்டு இருக்கும். ஒவ்வொரு தெரு மக்களுக்கும் ஒரு நேரம் , நாள் குறிப்பிட்டு தரப்படும். அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம், மற்றும் தேதிக்கு உங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக்கடை நடத்தும் முகாமிற்குச் செல்ல வேண்டும்.
உங்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மின் கட்டண ரசிது, குடும்ப அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.
முகாம்கள் ஞாயிற்றுக்கிழமை உட்பட எல்லா நாள்களிலும் காலை 9.30 முதல் ஒரு மணி வரையும், மதியம் 2.00 முதல் 5.30 மணி வரையும் நடைபெறும்.

சந்தேகங்களை தீர்க்க…
பொதுமக்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்க்க ஒவ்வொரு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்களும் உங்கள் பகுதியில் நியாயவிலைக்கடைகளில் அச்சடித்து ஒட்டப்பட்டிருக்கும்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்யத் தெரியாத பெண்களுக்காக முகாம் நடைபெறும் இடத்தில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு தன்னார்வலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலம் உதவி செய்யப்படும்.
உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்…
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கப்பட்டு இருக்கும் கைபேசி செயலி மூலமாக பதிவு செய்யப்படும். பதிவு செய்யப்பட்ட பின் உங்களுக்க ஓ.டி.பி எண் வரும். அதனை முகாமில் உள்ள அலுவலரிடம் கொடுத்து லாகின் செய்து கொள்ளவும். விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட பின் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டதாக விண்ணப்பதாரருக்கு ஒரு குறுஞ்செய்தி வரும்.

அதன் பின் அலுவலர்களால் களவிவரம் செய்யப்பட்டு திட்டத்தில் பயன் அடைய இருப்பவர்களுக்கான இறுதி பட்டியல் வெளியிடப்படும். அந்த தகவல் குறுஞ்செய்தியாக விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்படும். திட்டத்திற்கு தேர்வு செய்யப்படாதவர்களுக்கான காரணம் விண்ணப்பத்தின் கீழே இணையத்தில் வெளியிடப்படும். அதன் பின் அவர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால் 30 நாள்களுக்குள் செய்து கொள்ள வேண்டும். மேல் முறையீட்டு தாரர்களுக்கு விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் தீர்வு வழங்கப்படும்.
இத்திட்டம் செப்டம்பர் 15 -ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
from Tamilnadu News https://ift.tt/KtZSmap
