மணிப்பூரில் இரண்டு இனக்குழுக்களுக்கு மத்தியில் வெடித்திருக்கும் கலவரத்தை உலக நாடுகளே உற்றுநோக்குகின்றன. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் மணிப்பூர் விவகாரத்தில் இந்திய அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதும் பேசுபொருளானது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் எந்தப் பயனுமில்லை. மணிப்பூரிலும், மத்தியிலும் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க, இரண்டு மாதங்களைக் கடந்தும், தொடர்ந்து கொண்டிருக்கும் இந்தக் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர திணறுகிறது.

பா.ஜ.க-வின் மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங்

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றது தொடர்பான வீடியோ, நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தக் கொடூரச் சம்பவம் குறித்த தகவல் வெளியான பிறகு, இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளாகியது. பிரதமர் மோடியும், “மணிப்பூர் மகள்களுக்கு நடந்ததை மன்னிக்கமாட்டேன். குற்றவாளிகள் தப்பிக்க முடியாது. சட்டம் தன் வலிமையைக் கொண்டு முடிவெடுக்கும்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “உண்மையிலேயே மணிப்பூர் நிலை குறித்துப் பிரதமர் மோடிக்கு கோபம் இருந்தால், முதல்வர் என்.பிரேன் சிங்கை முதலில் பதவி நீக்கம் செய்யட்டும் பார்க்கலாம்… மேலும், நாடாளுமன்றத்தில் மணிப்பூரில் நடந்த ஒரு சம்பவம் பற்றி மட்டுமல்ல, மாநிலத்திலும் மத்தியிலும் பா.ஜ.க அரசு நடத்திய 80 நாள்கள் வன்முறைகள் குறித்து, விரிவான அறிக்கையை வெளியிடவேண்டும். இதை இந்தியாவே எதிர்பார்க்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ.க

அதைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, “இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். ஆனால் எனது கேள்விக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்த விவகாரம் குறித்து அரசு நிச்சயம் விவாதிக்க வேண்டும். பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வெளியே மணிப்பூரைப் பற்றி பேசுவதை, நாடாளுமன்றத்துக்குள் பேசியிருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

from Tamilnadu News https://ift.tt/6P4jyil