பா.ஜ.க ஆளும் மணிப்பூரில், மைதேயி சமூகத்தினருக்கும், குக்கி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை நடந்துவருகிறது. இந்த நிலையில், குக்கி இனப் பெண்கள் இருவர், மைதேயி சமூக ஆண்கள் குழுவால் நிர்வாணமாகச் சாலையில் இழுத்துச்செல்லப்பட்டு, பின்னர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ நாட்டையே தலைகுனிய வைத்திருக்கிறது.

இந்தச் சம்பவம் மே 4-ம் தேதி நடந்தும், அந்த மாதமே வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தபோதும், தற்போதுதான் இந்த விவகாரம் பொதுவெளிக்கு வந்திருக்கிறது. வீடியோ வெளியாகி எதிர்க்கட்சிகள் மொத்தமாக, `மத்திய அரசும், பிரதமர் மோடியும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்’ எனக் கடுமையாக வலியுறுத்தியதையடுத்து, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விதிக்கத் தயார் என மத்திய அரசு நேற்று அறிவித்தது.
ஆனால், நேற்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, `மணிப்பூர் கலவரம் தொடர்பாக விதிக்குமாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுகின்றன’ என்று கூறப்பட்டு நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரண்டாம் நாள் கூட்டம் மணிப்பூர் விவகாரம் தொடர்பான எதிர்பார்ப்புடன் இன்று தொடங்கியது. ஆனால் இந்த முறையும், எதிர்க்கட்சிகள் அமளி என்று கூறி, மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார் சபாநாயகர்.

இந்த நிலையில், மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அக்கறை காட்டவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் இது பற்றி பேசிய ராஜ்நாத் சிங், “மணிப்பூர் விவகாரம் குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பெரிதாக அக்கறை காட்டவில்லை என்று நினைக்கிறேன். ஆனால், மத்திய அரசு இந்த விவகாரத்தை விவாதிக்க விரும்புகிறது. மணிப்பூர் மாநிலத்தில் என்ன நடந்தாலும் இந்த நாட்டுக்கே அவமானம் என்றும், இதில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடியே கூறிவிட்டார். ஆனாலும், எதிர்க்கட்சிகள் விவாதிக்க விரும்பவில்லை என்றால், அவை தீவிரமாக இல்லை என்றுதான் அர்த்தம்” என்று கூறினார்.
from Tamilnadu News https://ift.tt/KZuPXQL
